இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அவதரித்த தண்டலம் கிராமத்தில் திருவிளக்கு பூஜை.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகில் அமைந்துள்ள அழகிய சிறிய கிராமம் தண்டலம். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் எழுபதாவது ஐகத்குருவாய் எழுந்தருளி நமக்கெல்லாம் அருள்பாலிக்கும் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவதரித்த தலம் தண்டலமாகும். ஸ்ரீஸ்வாமிகளுடைய 52 வது ஜயந்தித்திருநாளைஅங்கே கொண்டாட நமது இந்துசமயமன்றம் தீர்மானித்து திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கிராமப்பெரியோர்கள், ஸ்ரீமடத்து பக்தர்கள் ஒத்துழைப்பு நல்க 8.3.2020 ஞாயிறு அன்று மாலை இந்த வைபவம் ஸ்ரீஸ்வாமிகள் அருளாசியுடன் மிகச்சிறப்பாக நடந்தேறியது. மாசிமகமும் இணைந்த நன்னாள் அது.தண்டலம் கிராம தேவதை ஸ்ரீபொன்னியம்மன் ஸ்ரீசெல்லியம்மன் திருக்கோவிலிருந்து மாலை நான்கு மணிக்கு நாதஸ்வர மேளத்துடன் ஹரஹர சங்கர, ஜயஜய சங்கர கோஷத்துடன் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் விக்கிரகம், ஸ்ரீருத்ராக்ஷ லிங்கேஸ்வரர், ஸ்ரீகுருபாதுகைகளுடன் மக்கள் திரளாக தொடர ஊர்வலம் புறப்பட்டு கிராமத்தெருக்கள் வழியாக ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் சமேத ஸ்ரீதரணீச்வர ஸ்வாமி திருக்கோவிலை வந்தடைந்தது. கிராம கவுன்சிலர் திருமதி வித்யாலக்ஷ்மிகிரி அவர்களும் இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் திருமதி கௌரி வெங்கட்ராமன் மற்றும் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் திருமதி.அக்ஷயா ஸ்ரீராம் அவர்களும் திருவிளக்கேற்றி பூஜையை துவக்கிவைத்தனர். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயப்ரச்சாரகர் ஸ்ரீ.குமாரஸ்வாமிஜி திருவிளக்கு பூஜை நடத்தி வைத்தார். மகளிர் தினமானதால் அனைவருக்கும் ஸ்ரீகாமாக்ஷி விளக்கு, இரவிக்கைத்துணி, மற்றும் மங்கலப்பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் இந்துசமயமன்றத்தின் மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் வியாசர்பாடி கிளை ஸ்ரீஹரிஹரன்ஜி, ஸ்ரீகாஞ்சிகைங்கர்யசபா ஸ்ரீ.ராமச்சந்திரன் ஜி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் சமயமன்ற சட்டப்பிரிவு உறுப்பினருமான ஸ்ரீ.அனந்தசுப்ரமணியன்ஜி, சமயமன்ற புரவலர் ஸ்ரீ.ஸ்ரீதர ரத்னம்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.விழா நிறைவில் ப்ரசாதம் சர்க்கரைப்பொங்கல் மற்றும் புளியோதரை அனைவருக்கும் வழங்கப்பட்டது.இந்த விழா சிறப்பாக நடந்தேற எங்களுக்கு பெரிதும் உதவியும், பூஜைக்கு பள்ளிக்கரணையிலி ருந்து மஹாபெரியவர் விக்ரகத்தை அழகாக அலங்கரிக்கப்பட்ட வண்டியை தந்துதவி தானே கூட வந்து அனைத்து கைங்கர்யங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு இந்துசமயமன்றம் சார்பில் மனமார்ந்த நன்றிகள். தண்டலம் வேதபாடசாலை நிர்வாகிகள் மற்றும் வழக்கம்போல் உதவிய ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபாவிற்கு சமயமன்றம் சார்பில் நன்றிகள். இந்த கைங்கர்யத்திற்கு ஊக்கசக்தியாக இருந்த ஸ்ரீ.ஸ்ரீதர் அண்ணாவிற்கு நமஸ்காரங்கள். எங்களுடன் இணைந்து சேவையாற்றிய தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஸ்ரீராமிற்கு நன்றிகள்.
குருசேவையில்,
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் மற்றும்
கௌரி வெங்கட்ராமன்.

இருள் நீக்கி தந்த நல்மணியே

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் இரண்டாம் ஆண்டு ஆராதனை.

“இருள் நீக்கி தந்த நல்மணியே – மன
மருள் நீக்க வந்த மாமணியே
தவக்கனலாக மிளிரும் தூமணியே
சிவக்கனலாக ஒளிரும் அருள்மணியே
சகம் போற்றி புகழும் குருமணியே -நல்
அகம் வாழ்த்தி பணியும் ஜயமணியே
பதம் போற்றி நின்றோம் தவமுனியே
பவம் போக்கி அருள்வாய் சிவமணியே’

ஸ்ரீபுதுப்பெரியவரின் பொற்பதங்களில் நமஸ்காரங்களுடன்,
-புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன்

இரண்டாம் வருஷம் குரு ஆராதனை

ஸ்ரீசங்கரபகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய சர்வக்ஞபீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதீச்வரரும், ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர்களின் ப்ரதம சிஷ்யரும், பாரத தேசமெங்கும் வலம்வந்து சனாதன ஹிந்து தர்மத்தை எளிய மக்களுக்கும் போதித்தவரும், இந்து சமயமன்றத்தை பட்டிதொட்டியெல்லாம் வளர்த்தவரும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கை நலனிற்காக பெரிதும் பாடுபட்டவருமான ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் தற்போது ஸ்ரீகாஞ்சி ஸ்ரீமடத்தில் ப்ருந்தாவனப்ரவேசம் செய்து இரண்டாம் வருஷம் குரு ஆராதனை இன்று பக்தியுடன் நடைபெறுகிறது.இந்த புண்ணிய நன்னாளில் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் பொற்பதங்களில் இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா தனது ஹ்ருதயபூர்வமான அனந்தகோடி நமஸ்காரங்களை பக்தியுடன் சமர்ப்பிக்கிறது.
இவண்,
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான
இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா அன்பர்கள்.

ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் 52வது ஜயந்தி விழாவில் திருஞானசம்பந்த ஸ்வாமிகள் அருளிய கோளறுபதிகம்

ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் 52வது ஜயந்தி விழாவில் திருஞானசம்பந்த ஸ்வாமிகள் அருளிய கோளறுபதிகம் சிறு பிரதிகள் இந்துசமயமன்றம் சார்பில் வெளியிடப்பட்டு ஸ்வாமிகள் அருளாசியுடன் அனைவருக்கும் ஸ்ரீமடம் ஆழ்வார்பேட்டை ஆஸ்தீக சமாஜத்திலும் நேற்று இரவு ஸ்ரீமஹாசிவராத்திரியில் திருக்கோவில்களிலும் அன்பர்களுக்கு வழங்கப்பட்டது. நமது சமயமன்ற மாநில அமைப்பாளராக இருந்து எங்களை வழிநடத்திய செஞ்சொல்மணி புலவர் பு .மா. ஜயசெந்தில்நாதன் ஐயா அவர்கள் இதுபோன்ற சிறுபிரதிகளை அதிகம் வெளியிட்டு மக்கள் அதை படிக்க ஆர்வமேற்படுத்துவார். அவர்கள் அடியொற்றி திரும்பவும் இதுபோன்ற பிரதிகளை இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீபெரியவர் அனுக்ரஹத்துடன் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஸ்ரீபெரியவர்கள் ஐயந்தியையொட்டி நமது மன்றத்தின் சார்பில் வெளியிடப்பெற்ற கோளறுபதிகம் சிறு பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

சிவாய நம!
இந்துசமயமன்றம் சார்பில் நேற்று இரவு மஹாசிவராத்திரி புனித நாளையொட்டி இரவு முழுவதும் திருவாசக முற்றோதுதல் பல ஆலயங்களில் நடைபெற்றது. டிபன்ஸ்காலனி கோவிலில் ருத்ராக்ஷ லிங்கம் எழுந்தருளச்செய்து பூஜைகள் நடந்தது. அதேபோல் பல கிராமக்கோவில்களுக்கு திருவிளக்கேற்ற நல்லெண்ணெய் திரியுடன் வழங்கப்பட்டது. நமது சமயமன்ற அன்பர்களால் சுடச்சுட பாதாம்பால் மற்றும் குட் டே பிஸ்கட் சுமார் எட்டு சிவபெருமான் திருக்கோவில்களில் வழங்கப்பட்டது. ஸ்ரீபெரியவர்கள் ஐயந்தியையொட்டி நமது மன்றத்தின் சார்பில் வெளியிடப்பெற்ற கோளறுபதிகம் சிறு பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

உ.வே.சாமிநாதய்யர் அவர்களின் பிறந்தநாள் இன்று

தமிழ் தாத்தா மகாமகோபாத்யாய, தாக்ஷிணாத்ய கலாநிதி, முனைவர் உ.வே.சாமிநாதய்யர் அவர்களின் பிறந்தநாள் இன்று.
தமிழ் இலக்கிய புராண மற்றும் பலவகை நூல்களை அழிவின் விளம்பிலிருந்து காப்பாற்றிய பெருமை இவரைச்சாரும். தமிழ் பழம்பெருமையோடிருப்பதற்கு காரணகர்த்தர் இவரேயாவார். அன்னாரது பிறந்தநாளில் அவரின் பொன்னார்திருவடிகளில் இந்துசமயமன்றம் வணங்கி மகிழ்கிறது.