சிவாய நம! ஒரத்தூர் போலவே அருகில் உள்ள காவனூர் கிராமத்தில் உள்ள ஆறு இருளர் குடும்பங்களுக்கு புத்தாடை மற்றும் உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் காவனூர் ஊராட்சித்தலைவர் திரு.வெங்கடேசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர் நமது காஞ்சிப்பெரியவரின் மீது அபார பக்தியுள்ளவர். அவருக்கு ஸ்ரீகாஞ்சிப்பெரியவர் திருவுருவப்படம் வழங்கினோம். இவ்வூரில் உள்ள மக்களும் இல்லம்தேடி வந்து புத்தாடை, உணவு அளித்தமைக்கு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அனைத்தும் ஸ்ரீகாஞ்சி ஆசார்யாளின் அனுக்ரஹத்தில் நல்லபடியாக நடந்தேறியது.
Author: admin
அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்
சிவாய நம! தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் படப்பைக்கு அருகே உள்ளார்ந்த அழகிய கிராமம் ஒரத்தூர். இங்கு சுமார் இரண்டாயிரம் ஆண்டு மிகப்பழமையான அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. அவ்வூரின் குளக்கரையில் சுமாராக முப்பது இருளர் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். கூலிவேலை, காட்டில் விறகுவெட்டிப்பிழைத்தல் என ஆண்பெண் அனைவரும் அன்றாடங்காய்ச்சிகளாய் வாழ்க்கையை மிகுந்த ஏழ்மையான சூழலில் நகர்த்தி வருகிறார்கள். மிகத்தொன்மையான பழங்குடி மக்கள் இருளர் மக்கள். இவ்வளவு கஷ்ட ஜீவனத்திலும் அவர்களின் குல தெய்வ வழிபாடு, இசையுடன் நடனம் என அவர்களின் கலாச்சாரத்தை பேணிக்காத்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவிசெய்ய ஸ்ரீகாஞ்சி பெரியவர்கள் அருளினால் ஒரு வாய்ப்பு கிடைத்தது. தமிழர் திருவிழாவான பொங்கல் திருவிழாவிற்கு அவர்களுக்கு புத்தாடை எடுத்துக்கொடுத்து அவர்களுடன் கொண்டாட நினைத்து ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் சந்நிதியில் வேண்டி நின்றோம். ஸ்ரீபெரியவா மிகுந்த மகிழ்ச்சியாக இதற்கு ஆசியளித்து இதுபோன்ற மக்களுக்கு நிறைய செய்யுங்கள் எனக்கூறியருளினார்கள்.போதிய உதவிக்கு என்ன செய்வது என்ற கவலையுடன் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபாவைஅணுகி இதுபற்றி சொன்னோம். மேற்கொண்டு சபா அங்கத்தினர்களுக்கு ஒரு விண்ணப்பமும் அனுப்ப அந்த நல்ல உள்ளங்கள் வழங்கிய உதவியில் அனைத்து இருளர் மக்களுக்கும், சிறுகுழந்தை முதல் வயதான முதியவர்கள் வரை விடாமல் மிக நல்ல புத்தாடை வாங்கப்பட்டது. அதை ஸ்ரீபெரியவாளிடம் ஜனவரி 1ந்தேதி கொண்டுசென்று சமர்ப்பணம் செய்தோம். ஸ்வாமிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் குங்குமப்ரசாதம் அளித்து ஆசீர்வதித்தார். இன்று ஜனவரி 6ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை ஒரத்தூர் சென்று அம்மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தோம். ஒரத்தூர் ஊராட்சிச்செயலர் திரு.பார்த்தசாரதி அவர்கள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார். ஊராட்சித்தலைவர் திரு.கற்பகம் சுந்தர் அவர்கள்,தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் செயலாளர் ஸ்ரீராம், வண்டலூர் ஸ்ரீவழித்துணை பாபா கோவில் ஸ்தாபகர் டாக்டர் சாய்ராமலிங்கம், ஸ்ரீமணிகண்டன்ஜி,கூடுவாஞ்சேரி மன்ற அமைப்பாளர் திருமதி தாரா தேவராஜ், திருக்கோவில் எண்ணெய் வழங்கும் திட்ட பொறுப்பாளர் திரு.ராமச்சந்திரன், திரு.விஜயகுமார் சாந்தி தம்பதியர், ஊர் பிரமுகர் திரு.கோதண்டராமன் ஆகியோர் முக்கிய விருந்தினராக கலந்துகொள்ள நமது சமய மன்ற மாநில அமைப்பாளர் திருமதி. கௌரி வெங்கட்ராமன் அவர்கள் இறைவணக்கம் பாட, இருளர்களின் பாரம்பரிய இசை நடனத்துடன் விழா துவங்கியது. அனைத்து மக்களுக்கும் புத்தாடை வழங்கப்பட்டது. சிறப்பாக உணவு நமது சமய மன்ற உறுப்பினர் திரு. சந்திரநாத் மிஸ்ரா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு முன்னின்று பணத்தாலும், பொருளாலும், உடலாலும் ஒத்துழைத்த அனைவரும் நன்கு நலமுடன் வளமுடன் வாழ இறைவனை ப்ரார்த்தித்து கூட்டுப்ரார்த்தனை செய்தோம். உணவளித்து புறப்படும்போது அந்த மக்களின் அன்பு நம்மை நெகிழச்செய்தது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண்போம், மக்கள் சேவையே மாதவன் சேவை என்பதை ப்ரத்யக்ஷமாக உணர்ந்த தருணம் அது. அனைத்திற்கும் தோன்றாத்துணையாய் உள்ளிருந்து இயக்கும் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் கமல மலரடிகளை போற்றுகிறேன். இதுபோன்ற நற்செயல்கள் நிறைவேற உதவிடும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா உறுப்பினர்கள் அனைவருக்கும் அடியேன் மற்றும் என் அன்பு சகோதரி ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமனின் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் திருமதி.கௌரி வெங்கட்ராமன்.
மாநில அமைப்பாளர்கள்.
இந்துசமயமன்றம்.
ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகளின் ஆராதனை தினம்
ஸ்ரீகுருப்யோ நம!
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதீச்வரராய் சிறுவயதிலேயே பீடமேறி சனாதன இந்து தர்மத்தை தெய்வத்தின் குரலாக ஒலித்தவரும், அருள் தேடி வந்தோர்க்கு ஞான குருவாய் உபதேசித்தவரும், சர்வக்ஞராய் ஸகல தேசத்து பண்டிதர்களாலும் போற்றப்பட்டவரும், அனைத்து சமய நெறிகளையும் நன்கு உணர்ந்து அவரவர்களுக்கு தேவையானவற்றை கற்பகவிருக்ஷமாக பொழிந்தவரும், ஏழை எளிய மக்களின்பால் மிகுந்த அன்பு பூண்டு அவர்களது வாழ்க்கைக்கு ஸ்ரீமடத்தின் மூலமாக பல உதவிகளை செய்தவரும், தேசத்தை சரியான பாதையில் நடத்த தேசத்தலைவர்களுக்கு வழிகாட்டியவரும், அண்டினோர் துயர் தீர்க்கும் அருமருந்தானவரும், வேத தர்மமே தனது மூச்சுக்காற்றாய் வாழ்ந்தவரும், ஆதிசங்கரரின் அற்புதத்திருவுருவாய் புண்ணிய பாரதத்தை தன் திருப்பாதம் தோய நடந்து புனித யாத்திரை செய்தவரும், பல திருக்கோவில் திருப்பணிகளைச்செய்து தர்மம் வாழ வழிவகுத்தவரும், இந்து சமய மன்றத்தை ஸ்தாபித்து கூட்டுப்ரார்த்தனை, சத்சங்கம் என ஊருக்கு ஊர் நல்லவை நடக்க அருள்பாலித்தவரும், ஸ்ரீகாமாக்ஷியின் திருவுருவாய், நடமாடும் தெய்வமாய் நானிலம் கொண்டாடும் காஞ்சி மாமுனிவராய் கருணையோடு ஸ்ரீகாஞ்சி ஸ்ரீசங்கர மடத்தில் ப்ருந்தாவன வாசியாய் அதிஷ்டான தேவதையாய் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகளின் ஆராதனை தினமான இன்று பக்தியுடன் ஹ்ருதயபூர்வமான நமஸ்காரங்களை ஸ்வாமிகளின் திருவடி மலர்களில் சமர்ப்பிக்கிறோம்.
இந்து சமய மன்றம் (ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தின் ஆன்மீக கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு )
மற்றும்
ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா.
இந்துசமயமன்றம் சார்பில், ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஆதரவில் பழங்குடி மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்பட உள்ள ஆடைகளை ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹித்து அளித்தார்கள். அடியேனும் சகோதரி ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் அவர்களும் இன்று ஸ்ரீஆசார்யாளிடம் பொங்கல் விழாவிற்கு அனுக்ரஹப்ரசாதத்தை பெற்றுக்கொண்டோம்.
கடலாடியில் இந்துசமயமன்றம் கிளை துவக்கப்பட்டது
சிவாய நம! திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியில் இந்துசமயமன்றம் கிளை துவக்கப்பட்டது. அங்கே கடந்த மார்கழி முதல்நாள் ஸ்ரீகாஞ்சிப்பெரியவர் காண்பித்தருளிய வழியில் பர்வதமலை கிரிவலம் வரும் அன்பர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாத வினியோகம் நடைபெற்றது.
திருப்பாவை-திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி
திருப்பாவை-திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டிகள் மாணவ மாணவியர்க்கு ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியோடு இந்த வருடமும் வழக்கம்போல நமது இந்துசமயமன்றம் சார்பில் நமது கிளை மன்றங்கள், சார்பு அமைப்புகள்,ஸ்ரீமடத்தின் பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வருகிறார்கள். சிறப்பாக பாவை விழா ஆங்காங்கு நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்வமுள்ளவர்கள் ஆங்காங்கு இதை நடத்தலாம். எங்களை இதே குழுவில் தொடர்பு கொண்டு இந்த போட்டி பற்றிய விவரங்களை கேட்டறிய வேண்டுகிறேன். மாணவ மாணவியரின் பெற்றோர் தங்கள் குழந்தைகள் பயிலும் பள்ளி ஆசிரியரிடம் ஒப்புவித்து அவர் கையொப்பத்துடன் விண்ணப்பம் அனுப்பினால் அவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தை முதல் வாரத்தில் கலந்துகொண்ட மாணவ மாணவியரின் விவரம் எங்களுக்கு அனுப்பினால் ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹப்ரசாதத்துடன் மன்றத்தின் சார்பில் சான்றிதழ் வழங்க இயலும். முக்கியமான குறிப்பு : இதற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. ஆங்காங்கு இந்து சமய மன்றம் சார்பில் இந்த போட்டிகளை நடத்துபவர்களும் கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது.
ஸ்ரீபர்வதமலை கிரிப்ரதக்ஷிணம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் செங்கம் சாலையில் உள்ள புராதன மலை ஸ்ரீபர்வதமலை. அந்த மலை தக்ஷிணமேரு என்றும் தக்ஷிண கைலாயம் என்றும் வழங்கப்படுகிறது. சித்தர்களின் வாசஸ்தலமான இந்த மலையில் ஸ்ரீபிரமராம்பிகை உடனுறை ஸ்ரீமல்லிகார்ஜுன ஸ்வாமி வீற்றிருக்கிறார். எளிதாக ஏறமுடியாத இம்மலை செங்குத்தாக, கம்பிகள் மற்றும் கடப்பாரைகளை பிடித்து ஏற முடிகிற அமைப்பில் உள்ளது. இம்மலையினை ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் சிவஸ்வரூபமாக பாவித்து மார்கழி மாதம் முதல்நாள் கிரிப்ரதக்ஷிணம் செய்தார். மலைவலம் வருவதற்கு சரியான பாதை இல்லாத நிலையில் சுற்றுப்புற கிராமங்களின் களத்துமேடு, வயல்வெளி என பலவிதமாக பயணித்து ஸ்ரீமஹாபெரியவர் கிரிவலம் செய்தார்கள். சுமாராக 21 கிமீ க்கு மேல் சுற்றளவுள்ள இம்மலையினை ஸ்ரீபெரியவரின் பாதையில் இன்றளவும் மார்கழி முதல்நாள் பக்தர்கள் வலம்வருகிறார்கள். ஸ்ரீகாஞ்சி காமகோடி சங்கரமடத்தின் ஸ்ரீசங்கராச்சார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் போளூர் சங்கர வேதபாடசாலை மற்றும் திருவண்ணாமலை ஸ்ரீசங்கர மடம் இந்த புனிதமான பணியை மேற்கொண்டுவருகிறார்கள். இந்துசமயமன்றம் அன்பர்கள் வருகிற மார்கழி முதல்நாள் இதில் திரளாக பங்குகொண்டு சிவனார் அருள்பெறவும், ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் குருவருளையும் பெற ப்ரார்த்திக்கிறோம்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இந்துசமய மன்றம் சார்பில் தீபாவளி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி
இன்று (05.11.18) திங்கட்கிழமை ஸ்ரீபெரும்புதூர் வட்டம் படப்பை அருகிலுள்ள ஒரத்தூர் கிராமத்தில் பழங்குடியின இருளர் மக்கள் வசிக்கும் பகுதியில் நமது இந்துசமய மன்றம் சார்பில் தீபாவளி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாணையின்வண்ணம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பழங்குடியின மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்ய தீர்மானித்து முதற்கட்டமாக தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம், பிஸ்கட் வழங்கி அவர்களுடன் உரையாடி கொண்டாடினோம். இதற்கு ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹம் பரிபூரணமாக இருந்தது. ஒரத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் திரு. கற்பகம் சுந்தர் அவர்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்கியும் மதங்கள் அன்பை போதிக்கின்றன. அந்த வகையில் நமது சமயமன்றம் இதுபோன்ற நற்காரியங்களை செய்து வருவதை வரவேற்பதாகவும் வரும் காலங்களில் தங்கள் பகுதியில் செய்ய உத்தேசித்துள்ள மருத்துவ முகாமிற்கு ஒத்துழைப்பு நல்குவதாகவும் கூறினார்கள். ஊராட்சி மன்ற செயலர் திரு.பார்த்தசாரதி அவர்கள் நமக்கு வேண்டிய உதவிகளை செய்துதந்தார்கள். நமது சமயமன்ற மாநில அமைப்பாளர் ஸ்ரீமதி. கௌரிவெங்கட்ராமன், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு.ஸ்ரீராம், சமயமன்ற திருக்கோவில் எண்ணெய் வழங்கும் திட்ட பொறுப்பாளர் திரு.இராமச்சந்திரன், சமயமன்ற புரவலர்.திரு. சந்திரநாத் மிஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டு இனிப்பு வழங்கினார்கள். அழகான கிராமத்தில் அன்பான கிராமத்து மக்களுடன் ஆனந்தமாக தீபாவளி ஆசார்யாள் ஆசியுடன் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீதாமிரபரணி புஷ்கரம் விழிப்புணர்வு ரதயாத்திரை
சிவாய நம! இன்று (09.10.18) அன்று காலை வண்டலூரில் ஸ்ரீவழித்துணை பாபா ஆலயத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீதாமிரபரணி புஷ்கரம் விழிப்புணர்வு ரதயாத்திரையை வரவேற்றோம். வழித்துணை பாபா கோவிலை சிறப்புற நடத்தி வரும் ஸ்ரீசாய் ராமலிங்கம் ஐயா அவர்கள் ரதயாத்திரையை வரவேற்க மிகச்சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தார். இந்துசமயமன்றம் சார்பில் அடியேன்(புலவர் ஆத்ரேய சுந்தரராமன்) தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் ஸ்ரீராம் மற்றும் சாயிசேனா அமைப்பு சார்பில், ரதத்தில் உலாவரும் ஸ்ரீதாமிரபரணி தேவிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஸ்ரீஜெயமாருதிதாச ஸ்வாமிகள் ரதத்தில் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருளாசி, ப்ரசாத விநியோகம் செய்துவந்தார். வி எச் பி நிர்வாகிகள் ஸ்ரீமுருகானந்தம்ஜி மற்றும் ஸ்ரீராம், தாம்பரம் கணேஷ் மற்றும் பலர் ரதத்துடன் வந்தனர். அனைவருக்கும் ஸ்ரீசாய் ராமலிங்கம் ஐயா சுவையான சாய் அன்னப்ரசாதம் அளித்தார். தமிழக காவல்துறை மிகச்சிறப்பாக பாதுகாப்பு அளித்தார்கள். ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹத்துடன் ரதயாத்திரை வரவேற்பு நிகழ்ச்சி நன்றாக நடந்தேறியது.
