மஹாஅனுஷ நன்னாளில் ஹ்ருதயபூர்வமான பக்தி மலர்களை சமர்ப்பிக்கிறோம்

ஸ்ரீகுருப்யோ நம!
அனுஷ மூர்த்தி அகில லோக குருநாதர் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரை வைகாசி அனுஷ தினத்தில் மனதால் நினைத்து வணங்குகிறோம். அவர் கமலமலர் பாதங்களில் நோய்த்தொற்று நமது பாரத தேசத்தில் பாடாய்படுத்துவதை சொல்லி இன்னலை நீக்க வா வென வேண்டுவோம்.
வேதமும் சனாதன தர்மமும் புத்துணர்ச்சி பெற பாரதம் உலக அரங்கில் முதன்மை பெற ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் அருளாசியை ப்ரார்த்திப்போம்.
வேண்டத்தக்கது அறிவோய் நீ! வேண்ட முழுதுந் தருவோய் நீ என விண்ணப்பம் செய்வோம்.
என்றும் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய குரு பரம்பரையை வந்தனை செய்வோம்!
ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் திருவடிகளில் இந்துசமயமன்றம் வைகாசி மஹாஅனுஷ நன்னாளில் ஹ்ருதயபூர்வமான பக்தி மலர்களை சமர்ப்பிக்கிறது.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
ஸ்ரீமதி கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள் மற்றும் இந்துசமயமன்றம் அன்பர்கள்.

ஸ்ரீமஹாபெரியவர் கயிற்றுக்கட்டில்.

‘ஸ்ரீசங்கரம் லோகசங்கரம்!”

சனாதன ஹிந்து தர்மத்திற்கு புத்துயிரூட்டிய மஹான்!
அத்வைத சித்தாந்தத்தை ப்ரகாசப்படுத்திய ஞானி!
பாரதத்தின் குரு பரம்பரைகளில் ஓர் வைரம்!
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கு பிறகு “ஜகத்குரு ” என அழைக்கப்படும் ஒரே ஆசார்யர்!
வேதாந்தம் என்றாலே சங்கரரின் கோட்பாடுகள் என்னுமளவிற்கு நிலைநிறுத்திய வேதாந்தி!
பாரதமே உலகத்தின் ஞானதீபம் என்பதால் அதன் நான்கு திசைகளிலும் ஸ்ரீமடங்களை ஸ்தாபித்தும் மூலாம்னாய ஸ்ரீகாஞ்சி ஸர்வக்ஞ பீடத்தின் பீடாதீச்வரராக தானே வீற்றிருந்தருள்செய்த தவசீலர்!
தனக்கு முன் இருந்த துர்மதங்களை திருத்தி ஆறு பிரிவுகளில் இந்து சமயத்தை உருவாக்கிய ஷண்மதஸ்தாபனாச்சாரியர்!
தென்னகத்தின் ஆத்மஜ்யோதி!
ஜகத்குரு ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்யரின் ஜயந்தி திருநாளில் அவர்தம் திருவடிக்கமலங்களில் மனம், மொழி, மெய்களால் பக்தி பூர்வமாக, ஹ்ருதய சுத்தியோடு ஸ்வர்ணபுஷ்பங்களால் அஞ்சலி செய்து ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பான இந்துசமயமன்றம் நமஸ்கரிக்கிறது. ஸ்ரீசங்கரரின் வழிவந்த ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் இன்றைய ஆசார்ய ஸ்வாமிகள் வரை அத்துணை பீடாதீச்வரர்களையும் நமஸ்கரிக்கிறோம்.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
ஸ்ரீமதி கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள் மற்றும் இந்துசமயமன்றம் அன்பர்கள்.

உலக நன்மை வேண்டி இணைய வழியாக தமிழ்ப் பண்ணிசை வேள்வி

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சமுதாய சேவை அமைப்புகளான இந்து சமய மன்றமும் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து, இப்பெருந்தொற்றுக் காலத்தில் உலக நன்மைக்காக அன்றாடம் பாராயணம் செய்யவேண்டிய திருமுறை, திருப்புகழ் பாடல்களைத் தேர்வுசெய்து, மே மாதம் சனி, ஞாயிறுகளில் மாலை 5.00 முதல் 7.00 மணி வரை கூகுள் மீட் வழியாக தக்க பயிற்றுநர்களைக்கொண்டு பயிற்சியளிக்கவும் சேர்ந்திசையாகப் பாடவும் ஏற்பாடு செய்துள்ளன.
அந்தவைகையில்,
15.05.2021 சனிக்கிழமை கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் 57 வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ இராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் ஆசியுரையுடன் ஓதுவாமூர்த்திகள் திருமதி ரேவதி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் விருத்தாசலம் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் கி. சிவகுமார் அவர்களும் திருப்பாச்சிலாச்சிராமப் பதிகம், திருப்புள்ளிருக்குவேளூர்ப் பதிகங்களைப் பொருளுணர்த்தி, விண்ணப்பம் செய்கிறார்கள்.
16.05.2021 ஞாயிற்றுக்கிழமை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ஆம் பட்டம் குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் ஆசியுரையுடன் ஓதுவாமூர்த்திகள் திருமதி ரேவதி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் விருத்தாசலம் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் கி. சிவகுமார் அவர்களும் _ திருவதிகை வீரட்டானப் பதிகம், இடர்கெடு பதிகங்களைப் _ பொருளுணர்த்தி, விண்ணப்பம் செய்கிறார்கள்.
இந்த நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற, உலக நன்மைக்கான பண்ணிசை வேள்வியில் தாங்களும் ஒருவராய்ப் பங்கேற்க அழைத்து மகிழ்கிறோம்.

Google Meet link: https://meet.google.com/ghj-asys-hsk
Youtube link: https://www.youtube.com/channel/UCsLLZtA7LfTcNoCgN47l4yw

பரம பூஜ்யஸ்ரீ ஓங்காரானந்த ஸ்வாமிகள் மஹாஸமாதியடைந்துவிட்டார்கள்

பரம பூஜ்யஸ்ரீ ஓங்காரானந்த ஸ்வாமிகள் மஹாஸமாதியடைந்துவிட்டார்கள். ஹிந்து தர்மத்திற்கு மிகப்பெரிய பொக்கிஷமாக திகழ்ந்தவர். திருக்குறள் சொற்பொழிவு அவரைப்போல செய்ய எவராலும் இயலாது. வேத, உபநிஷத, ஸாஸ்த்ரங்களில் அபார ஞானத்துடன் சாதாரண பாமர மக்களுக்கு புரியும் வகையில் உபதேசித்தவர். சனாதன தர்ம எழுச்சிக்கு பாடுபட்டவர்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஆசார்ய ஸ்வாமிகள் மீது மிகுந்த அபிமானம் உள்ளவர்.
அவர்களின் மறைவு இந்து சமுதாயத்திற்கு பேரிழப்பு. ஸ்வாமிகளின் அருட்கமல மலரடிகளில் இந்துசமயமன்றம் மலரஞ்சலிகளை பக்தியுடன் சமர்ப்பிக்கிறது.
அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள்,
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு.

பேராயிரம் பரவி ப்ரார்த்தனை செய்யுங்கள்

இந்துசமயமன்றம் அன்பர்களே,
வணக்கம்.
வைத்தீஸ்வரன் கோவில் (புள்ளிருக்குவேளூர்) கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி எல்லோரும் நாளை (29/Apr/2021) தேவாரப்பதிகங்களில் “பேராயிரம் பரவி” என்கிற பதிகத்தை ஓதி மனமார தையல்நாயகி சமேத ஸ்ரீவைத்தீஸ்வரப்பெருமானை ப்ரார்த்தனை செய்யுங்கள். உலகத்தை ஆட்டிப்படைக்கும் தீராத நோய்த்தொற்றை அழித்தொழிக்க சிவபெருமானை அவனருளாலே அவன் தாள்வணங்கி வேண்டுங்கள். நல்லதே நடக்கட்டும் நமசிவாயம் அருளட்டும்!

புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான
இந்துசமயமன்றம்.

“பேராயிரம் பரவி”

திருச்சிற்றம்பலம்

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவுஇலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்து அருளவல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீ எழத் திண்சிலை கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!
(நோய் தீர்க்கும் அப்பர் தேவாரம்)


பொருள் : தேவர்களால் ஆயிரக்கணக்கான பெயர்களால் புகழப்படும் சிவனே! உன்னை மறக்காத பக்தர்களுக்கு கிடைப்பதற்கரிய பிறப்பற்ற நிலை அருள்பவனே! நோய் தீர்க்கும் மந்திரமாகவும், தந்திரமாகவும், மருந்தாகவும் விளங்குபவனே! தீராத நோய் தீர்த்தருளும் வல்லவனே! அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரிக்க வில் ஏந்தியவனே. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் வைத்தீஸ்வரன் கோவிலில் வீற்றிருக்கும் வைத்திய நாதனே! உன்னை
இத்தனை நாளும் நினைக்காமல் வீணாக பொழுதைக் கழித்து விட்டேனே!

ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் மூன்றாவது ஆராதனை

ஸ்ரீகுருப்யோ நம!
இந்துசமயமன்றம் சார்பில் டிபன்ஸ் காலனி அருள்மிகு வரசித்தி வினாயகர் திருக்கோவில் திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் மூன்றாவது ஆராதனை சமயத்தில் 26.03.2021 வெள்ளிக்கிழமையன்று உலகநன்மைக்காக கூட்டுப்ரார்த்தனை, குரு வணக்க வழிபாடு சிறப்பாக நடத்தினார்கள். அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் அவர்கள் ஸ்ரீபுதுப்பெரியவரின் மகிமைகளை எடுத்துக்கூறினார்கள்.கிளை அமைப்பாளர் திருமதி. தாரா தேவராஜ் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார்கள்.