சங்கராச்சாரியார் சுவாமிகள் அருள் ஆசியுடன் சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற 1008 குத்துவிளக்கு பூஜை

21.5.2019 காஞ்சி காமகோட்டி பீடத்தின் 70 ஆவது சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருள் ஆசியுடன் சென்னை துரைப்பாக்கம் அடுத்துள்ளது கண்ணகி நகரில் உள்ள மத்திய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 1008 பெண்கள் கலந்துகொண்ட குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது

ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரின் (மஹா அனுஷம்) ஜயந்தித்திருநாள்! இந்து சமய மன்றம் ஸ்தாபகர் தினம்!

ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரின் ஜயந்தித்திருநாள்!

“இந்துசமயமன்றம் ஸ்தாபகர் தினம்”

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாக வீற்றிருந்து, நடமாடும் தெய்வமாக நம்மிடையே உலாவி இன்றளவும் சூக்ஷ்ம ஸ்வரூபமாக தோன்றாத்துணையாக நமக்கு வழிகாட்டி வரும் ஸ்ரீமஹாபெரியவர் என பக்தியுடன் அழைக்கப்படும் ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகளின் 126வது அவதார நன்னாள் இன்று. அனுஷ நக்ஷத்ரத்திற்கு பல பெருமை உண்டு என்றாலும் ஸ்ரீஆசார்யாள் ஜனித்த நக்ஷத்ரம் என்பதே இன்று ப்ரதான பெருமையாகிவிட்டது.
சனாதன ஹிந்து தர்மத்திற்கும் அதன் வேத வைதீக கர்மாக்களுக்கும் சடங்குகள் சம்ப்ரதாயங்களுக்கும் பலமுனைத்தாக்குதல்கள் நடந்தும், மதமாற்றங்கள் மற்றும் இறையச்சம் இல்லாதவர்கள் பேசிய அடுக்கு மொழிகளில் மயங்கியும், இனம், சாதி என குறுகிய வட்டத்தில் மக்கள் வலம்வரும் போக்கைப்பார்த்து வருத்தப்பட்டு பரமகருணையுடன் பரமேஸ்வரன் அவதாரமான ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் 1972ம் வருடம் தோற்றுவித்த அமைப்பு இந்துசமயமன்றம் ஆகும். புனித பாதயாத்திரைகள், கூட்டுப்ரார்த்தனைகள், திருவிளக்கு வழிபாடுகள், சமய போதனை வகுப்புகள், தேவார, திருவாசகம், திவ்யப்ரபந்த தமிழ் மறையை அனைவருக்கும் கற்றுத்தருதல்,தமிழ் நீதிநூல்களை குழந்தைகளுக்கு போதித்தல், அன்னதானம், ஞானதானம், இந்துக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வை ஏற்படுத்துதல், எந்த சாதி மத வித்தியாசமும் பார்க்காமல் இயற்கை சீற்றங்களில் உதவுதல், பிடிஅரிசித்திட்டம் என இந்துசமயமன்றத்தின் நோக்கங்களை மிக அற்புதமாக வடிவமைத்துக்கொடுத்தவரும் நம் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர்தான். அவர் காட்டிய வழியில் எத்தனையோ தன்னார்வத்தொண்டர்களின் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பில் பணத்திற்கு முக்கியத்துவம் தராமல் அன்றிலிருந்து இன்றுவரை ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் காட்டிய பாதையில் செயல்பட்டு வருகிறது சமயமன்றம்.
பாரத தேசமெங்கும் தன் திருப்பாதம் தோய நடந்து தன் அருட்பார்வையால் அகிலத்தை ஆன்மீக வழியில் திருப்பி ஜகத்குரு என்ற பெயருக்கேற்ப மஹாகுருவாக விளங்குகிறார் என மற்ற சமயத்தை சேர்ந்தவர்கள் கூட மதித்து வணங்கும்படி வாழ்ந்த குருதேவர் ஸ்ரீமஹாபெரியவர். அவரின் ஜயந்தித்திருநாளில் ஸ்ரீஆசார்யாள் நமக்கு அருளிய உபதேசத்தை மனதிற்கொண்டு மக்களுக்கு தொண்டாற்ற முனைவோம்.
அவருக்குப்பின் பீடமேற்ற ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளும் இம்மன்றத்தின் பணிகளுக்கு அருளாசி வழங்கி வந்தார்கள்.
இன்று ஞானசத்குருவாய் நம்மிடையே அருளாசி வழங்கிவரும் ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் இந்துசமயமன்றத்தின் புனருத்தாரணத்திற்கு பலவகையிலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து அருளாசி வழங்கி வருகிறார்கள்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் பெருமைமிகு ஜகத்குரு ஸ்ரீமஹாபெரியவராலேயே தோற்றுவிக்கப்பட்ட இந்துசமயமன்றத்தில் இணைந்து கைங்கர்யம் செய்வதே பெருமை, புண்ணியம் என மகிழ்வுடன் ஆங்காங்கு அவரவர் பகுதிகளில் ஆன்மீக சமுதாயப்பணிகளை செய்ய முன்வருவீர்.
“ஜகத்குரு திருவடிகள் போற்றி! போற்றி !”

புலவர் க. ஆத்ரேய சுந்தரராமன்,
திருமதி.கௌரி வெங்கட்ராமன்,
அமைப்பாளர்கள்,
இந்துசமயமன்றம்.

(ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தின் சமயச்சேவை அமைப்பு.)

ஏகதின கோடி காயத்ரி ஜபம்

ஸ்ரீகுருப்யோ நம! இன்று 01.05.19 புதன்கிழமை அன்று தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளியில் ஏகதின கோடி காயத்ரி ஜபம் பஞ்சமி சேவா டிரஸ்ட், ஸ்ரீசங்கரா டிவி மற்றும் பல தன்னார்வலர்கள், ஸ்ரீமடத்தின் பக்தர்கள் சேர்ந்து மிக விசேஷமாக நடந்தேறியது. நெரூர் ஸ்ரீவித்யா சங்கர ஸ்வாமிகள் விஜயம் செய்து அனுக்ரஹ பாஷணம் செய்தார். இரண்டாயிரம் பேர் சுமாராக கலந்துகொண்டு காயத்ரி ஜபம் சிரத்தையுடன் பண்ணினர்.ஸ்ரீ சங்கரா டிவி நேரடி ஒளிபரப்பு காலை ஆறிலிருந்து எட்டு மணிவரை செய்தனர். அடியேன் வேதமாதாவைப்பற்றி பேசும் பாக்கியம் சிறிது பெற்றேன். இந்த கோடி காயத்ரி ஜபத்திற்கு ஊக்கப்படுத்தி, ஆங்காங்கே ஸஹஸ்ரகாயத்ரி ஜபங்களை நடத்தி எழுச்சியூட்டிய பஞ்சமி ஸ்ரீ.நாகராஜன் அண்ணா, ஸ்ரீராம், ஸ்ரீரமணி ஹால் ஸ்ரீமகேஷ், கவிஞர். சாணுபுத்திரன், இந்துசமயமன்றம் மன்றக்கிளைகள், திருவொற்றியூர் ஸ்ரீசங்கரமடம் ஸ்ரீ.விசு, வேதபாரதி அமைப்பு, மாடம்பாக்கம் ஜனகல்யாண், மற்றும் பல அமைப்புகள் இந்த புனித யக்ஞத்தில் கலந்துகொள்ள அன்பர்களை அழைத்திருந்தனர். உலக நலனை வேண்டி நடத்தப்பெறும் இந்த ஜபயக்ஞம் தொடர்ந்து ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹத்துடன் சிறப்பாக அனைத்து பகுதிகளிலும் நடக்க வேதமாதா ஸ்ரீகாயத்ரி மாதாவை ப்ரார்த்திக்கிறேன்.

சிறுவர் சிறுமியர்க்கான நிகழ்ச்சி

20.04.19 அன்று ஆதம்பாக்கத்தில் ஸ்ரீசங்கர கேந்திரத்தில் நடைபெற்ற சிறுவர் சிறுமியர்க்கான நிகழ்ச்சி. இந்துசமயமன்றம், ஆதம்பாக்கம் கைங்கர்ய சபா, காமாக்ஷி ஸ்ரீவித்யா சமிதி இணைந்து நடத்தியது.

ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் விஜயம்

ஆதம்பாக்கம் ஸ்ரீசங்கர கேந்திரத்தில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் விஜயம். ஸ்ரீசந்த்ரமௌளீச்வர பூஜை தினமும் சிறப்பாக நடக்கிறது. அங்கு நமது சமயமன்றம் சார்பில் வரவேற்பு பேனர் மற்றும் சமயமன்ற பணிகளைப்பற்றிய பேனர். தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்.

ருத்ராபிஷேகம் கூட்டுப்ரார்த்தனை

“ஹரஹர சங்கர” கோஷத்துடன் திங்கட்கிழமை காலை எங்கள் வாகனம் கோனேரிராஜபுரத்தையடைய அங்கிருந்தே எங்களை அழைத்துபோக சிவனார்அகரம் ஸ்ரீ.ராஜகோபால் அவர்கள் வந்து அழைத்துப்போனார். அவர்கள் இல்லம் சென்றவுடன், அக்ரகாரத்து அத்தனை மக்களும் எங்களை வரவேற்க அவர்கள் அன்பில் நாங்கள் திக்குமுக்காடி விட்டோம். குளித்து அனுஷ்டானங்களை முடித்து ஸ்ரீவாருணீஸ்வரஸ்வாமி கோவிலுக்கு ஸ்ரீமஹாபெரியவா பாதுகைகள், ஸ்ரீமஹாபெரியவா விக்கிரகம், ஸ்ரீருத்ராக்ஷலிங்கேஸ்வரருடன் மேளதாளம், பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டோம். கும்பகோணம் ப்ரம்மஸ்ரீ.தினகர சர்மா அவர்களின் சிஷ்யர் ஸ்ரீப்ரபு சர்மா தலைமையில் உத்தமமான வைதீக வேத விற்பன்னர்கள் வருண ஜபத்துடன் மஹன்யாஸ ஸ்ரீருத்ர பாராயணம் செய்து வைக்க நமது வேண்டுகோளையேற்று வந்திருந்தனர். ராணிப்பேட்டை ஸ்ரீவித்யா பீடம் ஸ்ரீபாரதீ முரளீதர ஸ்வாமிகள் வருகை புரிந்தார். ஸ்ரீபெரியவா பக்தர் திண்டிவனம் நாகராஜய்யர், அபிஷேகங்களை நடத்தி வைக்க என் அருமை அண்ணா நந்திவரம் சிவஸ்ரீ.நடராஜ சிவாச்சாரியார் என அனைவரும் ஸ்வாமி சந்நிதியில். ஸ்ரீஜலமுகளாம்பிகைக்கு மடிசார் புடவை கட்டி கல்யாணப்பெண்ணாக அலங்காரம். காணக்கோடிக்கண் வேண்டும். ஸ்வாமிக்கு அபிஷேகம் ஆரம்பமானது. சந்தனாதி தைலம், பஞ்சகவ்யம், பஞ்சாம்ருதம், என பதினோரு அபிஷேகம். பதினோரு ஸ்ரீருத்ர பாராயணம், பதினோரு நெய்வேத்தியம், பதினோரு வகை பழங்கள், பதினோரு வகை புஷ்பங்கள் என மஹா அபிஷேகம், பூர்த்தியாக கலசாபிஷேகம் , சிறப்பு அலங்காரம், வில்வதளத்தினால் பஞ்சமுகார்ச்சனை பரமேஸ்வரனுக்கு ஐந்து திருமுகங்களுக்கும், உபசார பூஜைகள் என அனைத்தும் பூர்த்தியாக மதியம் மணி இரண்டரைக்கு மேல். அன்னப்ரசாதம் அமர்க்களமாக வடை பாயசத்துடன் அந்த ஊர் மக்களின் அன்பைப்போலவே சிறப்பாக எங்களுக்கு இருந்தது. மாலை கல்யாணோத்சவம். நடுவில் கிடைத்த நேரத்தில் அருகே கருவேலி சர்வாங்க சுந்தரி சமேத சற்குணேஸ்வரர் கோவில், திருவீழிமிழலை ஸ்ரீசுந்தரகுஜாம்பிகை சமேத ஸ்ரீவீழிநாதஸ்வாமி கோவில், சிவனார்அகரத்திலேயே வட இந்தியப்பாணியில் அந்த ஊர்க்காரர் டெல்லி.ஸ்ரீவெங்கட்ராமன் அவர்கள் பக்தியோடு கட்டியுள்ள ஸ்ரீராதா க்ருஷ்ணர், ஸ்ரீஆஞ்சநேயர் கோவில் (அத்தனையும் அழகான பளிங்குச்சிலைகள்) என அனைத்து தலங்களுக்கும் ஸ்ரீமஹாபெரியவா திருமேனியுடன் சென்று தரிசித்தோம். ஸ்ரீமஹாபெரியவாளும், ஸ்ரீபுதுப்பெரியவாளும் இந்த சிவனார்அகரம் கோவிலுக்கு வந்து தரிசித்து சென்றுள்ளனர் என்பது விசேஷம். அங்கு ஸ்ரீமஹாபெரியவாளால் தோற்றுவிக்கப்பட்ட இந்துசமயமன்றம் சார்பில் அவர்கள் அருளால் மழை வேண்டி செய்யப்பட்ட இந்த கூட்டுப்ரார்த்தனைக்கு அன்று இரவிலிருந்தே பலனையும் ஸ்ரீவாருணீஸ்வரஸ்வாமி வழங்கிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்படுகிறேன். அன்று இரவே மன்னார்குடி, திருவாரூரில் மழை மற்றும் சிவனார்அகரம் பகுதியில் தூறல் மழை என அந்த ஸ்வாமியின் பேரருட் பெருங்கருணை பொழிய ஆரம்பித்துவிட்டது போலும். நேற்று 16.04.19 அன்று மாலை சென்னை ஆதம்பாக்கத்தில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் பாலப்பெரியவாளிடம் சிவனார்அகரம் ஸ்ரீவாருணீஸ்வரஸ்வாமி ப்ரசாதம் சமர்ப்பித்தபோது மிகுந்த சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டது எங்கள் பாக்கியம். இதேபோல வருடந்தோறும் அங்கு ருத்ராபிஷேகம் செய்ய ஊர்பெரியவர்கள் கேட்டது ஸ்வாமியின் அருளே.வருடந்தோறும் இனி சிவனார்அகரம் செல்வோம் என எண்ணும்போதே மனம் இனிக்கிறது.

ஸ்ரீராமநவமித்திருநாள் வாழ்த்துக்கள்!

ஜெய் ஸ்ரீராம்! நமது இதிகாச நாயகன் “ஒரு வில்”ஒரு சொல்”ஒரு இல்” என தர்மத்தோடு வாழ்ந்தவன், “ராமோ விக்ரகவான் தர்ம” தர்மமே உருவானவன் பிறந்த தினம் இன்று. வேய் புனர்பூசமும் விளங்கு நற் கடகமும் ஒருசேர நின்ற நல் நேரத்தில் அவதரிதத மஹா புருஷன். அதர்மம் நீக்கி தர்மம் காக்க வந்த தலைமகன், சனாதன மதத்தின் மஹா சத்திரியன், ஆதி அந்தமிலா அனந்த நாராயணனின் அவதாரம், சீதையின் மனங்கவர்ந்த செல்வ மணவாளன், ஆற்றல்மிகு அனுமனின் இதய தெய்வம், தியாகையரும் ராமதாசரும் உருகி உருகிப்பாடி உய்வடைந்த திருவடியோன்- அந்த ரகுகுல திலகத்தை ஸ்ரீராமபிரானை, சீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத் சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை இன்று போற்றி வணங்கி துதிப்போம்! அனைவருக்கும் ஸ்ரீராமநவமித்திருநாள் வாழ்த்துக்கள்!
அமைப்பாளர்கள்,
ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தின் சமயச்சேவை அமைப்பு,
இந்துசமயமன்றம்.

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீகுருப்யோ நம!
கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்த குடி தமிழ்க்குடி என ஒரு சொல் வழக்கு உண்டு. ஆதித்தமிழனில் இருந்து இன்று வரை தமிழரின் நாகரீகம், கலாச்சாரம், பண்பாடு உலகத்தோருக்கு ஒரு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. நமது அன்னைத்தமிழ்நாட்டு மக்களின் சமய நெறி ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள், சித்தர்கள் என அனைவராலும் வளர்த்தெடுக்கப்பட்ட உயர்ந்த நெறி. மொழியின் தொன்மை, நாகரீகத்தொன்மை, கலாச்சாரத்தொன்மை, இலக்கியத்தொன்மை, வாழ்க்கை நெறி உயர்வு என அனைத்தும் மகோன்னதமானது. அவ்வாறான சிறப்பு வாய்ந்த செந்தமிழ் நாட்டு மக்கள் நாம் என்கிற பாரம்பரிய பெருமை கொண்டவர்கள் நம்மவர்கள். நம் தமிழ் புத்தாண்டு பிறக்கும் இவ்வேளையில் நமது நாடுயர, நாம் நலமுடன் வளமுடன் வாழ, நம் தமிழ் மக்கள் வாழ இறைவனை ப்ரார்த்திப்போம். அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்!
அமைப்பாளர்கள், இந்துசமயமன்றம்,
ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தின் சமயச்சேவை அமைப்பு.