இந்துசமயமன்றம் சார்பில் மழை வேண்டி ருத்ராபிஷேக கூட்டுப்ரார்த்தனை.

இன்றைய நாகை மாவட்டம், பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்,கோனேரிராஜபுரம் அருகில் உள்ள ஊர் சிவனார்அகரம். இத்தலத்து இறைவன் ஸ்ரீவாருணீஸ்வரஸ்வாமி. அம்பாள் திருநாமம் ஸ்ரீஜலமுகள நாயகி.
தீர்த்தம் வருண தீர்த்தம்.
வருண பகவான் பூஜித்த தலம் இது. அருகில் உள்ள கோனேரிராஜபுரம் பூமிக்குரிய தலமாக ஸ்காந்த புராணத்தில் சொல்லப்படுகிறது. அதன் எட்டு திக்குகளில் திக்தேவதைகளால் தீர்த்தம் ஏற்படுத்தப்பட்டு , ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்கத்திருமேனிகள் பற்றி ஸ்காந்த புராணத்தில் சிறப்பாக சொல்லப்படுகிறது. இந்த எட்டு கோவில்களிலும் நவக்கிரக சந்நிதி கிடையாது. சிவனார்அகரம் மேற்கு திக்கில் உள்ளதால் சனி பகவானுக்கு விசேஷம் என்றும் சொல்கிறார்கள். பல்லாயிரம் வருஷ தொன்மையான இத்தலத்து இறைவனுக்கு வருண ஜபம் செய்து 108 குடம் சுத்த ஜலத்தினால் அபிஷேகம் செய்தாலே மழை வருஷிக்கும் என்பது இத்தலத்து சிறப்பு. இந்த திருக்கோவிலில் ஏகாதச ருத்ராபிஷேக ம் செய்து மழைக்காக கூட்டுப்ரார்த்தனை செய்ய இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் அனுக்ரஹத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதமே வெயிலின் உக்கிரம் தாங்க முடியாத நிலையிலும், தண்ணீர் பஞ்சம் இப்போதே பல இடங்களில் ஏற்பட்டுள்ள நிலையிலும் அபாரகருணாமூர்த்தியான பரமேஸ்வரனை தஞ்சமடைந்து மனமுருகி ப்ரார்த்தனை செய்வோம். வருகிற ஏப்ரல் 15ந்தேதி திங்கட்கிழமை சோமவார நன்னாளில் காலை 7மணிக்கு ஏகாதச ருத்ராபிஷேகம் மஹன்யாச ஜபத்துடன் ஸ்ரீகாஞ்சி ஆசார்யாளின் அனுக்ரஹத்துடன் சிவனார்அகரம் ஸ்ரீவாருணீஸ்வரஸ்வாமிக்கு நடைபெற உள்ளது.
இத்தலம் கும்பகோணம் காரைக்கால் மார்க்கத்தில் கும்பகோணம் அருகில் அமைந்துள்ள தலமாகும். ருத்ராபிஷேகத்தன்று மாலை 5 மணிக்கு ஸ்ரீவாருணீஸ்வரஸ்வாமி சமேத ஜலமுகள நாயகிக்கு திருக்கல்யாண மஹோத்ஸவம் ஊர்மக்கள் ஒத்துழைப்புடன் நடைபெற உள்ளது.
ஸ்வாமிக்கு குளிரக்குளிர அபிஷேகம் பண்ணி கல்யாண உத்ஸவமும் நடக்கட்டும். ஸ்வாமி தண்ணீர் பஞ்சத்தை தீர்த்தருள்வான். ஸ்ரீகாஞ்சி புதுப்பெரியவர் ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் இத்தலத்து இறைவனை வேண்டி மழை பொழிந்துள்ளது. நாமும் வேண்டுவோம் வாரீர்!
பதினோரு அபிஷேகம், பதினோரு நெய்வேத்தியம், பதினோரு பேர் ஸ்ரீருத்ரம் பாராயணம், பஞ்சமுகார்ச்சனை என
பொதுநல நோக்குடன் உலகநலன் வேண்டி செய்யப்படும் இந்த புண்ணிய கைங்கர்யத்தில் பங்குபெற விரும்புவோர் கீழ்க்கண்ட இந்துசமயமன்றத்தின் விழா ஒருங்கிணைப்பாளர்களின் கைபேசி எண்களில் அணுகலாம். புலவர் க.ஆத்ரேயசுந்தரராமன்
9789007401, ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் 9080588620, ஸ்ரீ.ராம்ராம்.சுந்தரராமன் 9840588593, ஸ்ரீராம் 7305055553, ஸ்ரீ.சாணுபுத்திரன் 9940199430, ஸ்ரீ.ஸ்ரீகாந்த் 9841745779

சிவாலய துதி மலர்

இந்துசமயமன்றத்தின் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் 51 வது ஜெயந்தி விழா மலராக அடியேன் தொகுத்து வெளியிடப்பெற்ற “சிவாலய துதி மலர்” என்னும் புத்தகத்தை ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹித்து அருளாசி வழங்கிய காட்சி.

திருக்கல்யாண மஹோத்ஸவம்

நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தாம்பரம் சேலையூர் பாரதிநகர் அருள்மிகு நெல்லூரம்மன் திருக்கோவிலில் ஸ்ரீவள்ளி தெய்வயானை உடனுறை ஸ்ரீசமுருகப்பெருமானுக்கு திருக்கல்யாண மஹோத்ஸவம் நடத்த அடியேனுக்கு பாக்கியம் கிடைத்தது. அன்பு இளவல் ஸ்ரீராம் மற்றும் ஷ்யாம் அவர்களின் ஒத்துழைப்பில் விழா சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட இந்த வைபவத்தில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்கு மேளதாளத்திற்கேற்ப ஸ்ரீராம் மற்றும் ஷ்யாம் ஆடிய ஆட்டம் மிகவும் பக்திப்பரவசமாக இருந்தது. பக்தர்கள் மெய்மறந்து அமர்ந்திருந்தனர்.

பால்குட உற்சவம்

இன்று பால்குட உற்சவம், ஊர்வலம்,விஸ்வ ஹிந்து பரிஷத் வேலுடன் கூடுவாஞ்சேரி டிபன்ஸ்காலனியில் அருள்மிகு வரசித்தி வினாயகர் திருக்கோவில் ஸ்ரீவள்ளி தெய்வயானை உடனுறை ஸ்ரீசமுருகப்பெருமானுக்கு நடைபெற்றது. இதில் இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், வி.எச்.பி. வடதமிழகம் அமைப்பாளர் ஸ்ரீ.ராமன்ஜி மற்றும் RSS கோசேவா ப்ரமுக் ஸ்ரீ.ஸ்ரீகாந்த்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

குரு ஆராதனை

ஸ்ரீகுருப்யோ நம!
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது அருட்குருநாதர், மக்கள் இருள்நீக்க இருள்நீக்கியில் அவதரித்த அவதார புருஷர், வேத நெறி தழைத்தோங்க , மானுடம் மகிழ்வுடன் வாழ அனவரதமும் சிந்தித்த மனிதநேய சிந்தனையாளர், கல்விக்கூடங்கள், மருத்துமனைகள் பாரதம் முழுவதும் ஏற்படுத்திய தன்னிகரற்ற அருட்செல்வர், ஆதிசங்கரரின் அற்புதத்திருவுருவாய் கைலாயம் சென்று வந்து, பாரத நாட்டை பலமுறை வலம்வந்து, ஹிந்து சமுதாயத்திற்காக உழைத்த பரமஹம்ஸர், ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரின் அதி உன்னத சீடர், அன்னை காமாக்ஷிக்கு தங்கக்கோபுரம் வேய்ந்தும் ஆதிசங்கரரின் சந்நிதியில் ஸ்வர்ண விமானம் அமைத்த துறவரசர், பாலபாஸ்கரராய் ப்ரகாசிக்கும் ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளை நமக்கு குருவாய் அனுக்ரஹித்த அன்பு குருநாதர் மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகளின் முதலாவது குரு ஆராதனை தினத்தில் இந்துசமய மன்றம் தனது அனந்தகோடி நமஸ்காரங்களை ஸ்வாமிகளின் பொற்பதங்களில் சமர்ப்பிக்கிறது.
அமைப்பாளர்கள் மற்றும் இந்து சமயமன்ற அன்பர்கள்.

ஒத்திவாக்கம் அருள்மிகு தையல்நாயகி சமேத ஒத்தீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாட்கள்

நேற்று 04.03.19 மஹாசிவராத்திரியை முன்னிட்டு இந்துசமயமன்றம் அன்பர்களுடன் ஒத்திவாக்கம் அருள்மிகு தையல்நாயகி சமேத ஒத்தீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாட்கள் நடத்தப்பெற்றது. அதுசமயம் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஸ்ரீராம் அவர்களின் முயற்சியில் ஒத்தீஸ்வரருக்கு சமர்ப்பிக்கப்பட்ட ருத்ராக்ஷ மாலை திருக்கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு ஸ்வாமிக்கு சாற்றப்பட்டது.

நேற்று 04.03.19 அன்று மஹாசிவராத்திரியை முன்னிட்டு இந்துசமயமன்றம் அன்பர்களுடன் டிபன்ஸ்காலனியில் ஸ்ரீராமநாதேஸ்வரர் சந்நிதியில் திருவாசகம் முற்றோதுதல் சிறப்பாக நடைபெற்றது. விசேஷமாக ஸ்ரீருத்ராக்ஷலிங்கேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருக்கோவிலுக்கு தீப எண்ணெய் வழங்கப்பட்டது.

ஆன்மீக கண்காட்சி

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெறும் இந்து ஆன்மீக கண்காட்சியில் இந்துசமயமன்றம் அரங்கிற்கு ஸ்ரீபெரியவர்கள் வருகைபுரிந்த காட்சி.

இந்து மக்கள் கட்சி ஸ்ரீஅர்ஜுன்சம்பத் அவர்கள் நமது அரங்கிற்கு வருகைபுரிந்த காட்சி.

பிஜேபி அகில பாரத செயலாளர் ஸ்ரீ.H.ராஜா அவர்கள் நமது அரங்கிற்கு வருகை.

ஹிமாச்சல் சாது ஸ்ரீநாராயண தீர்த்த ஸ்வாமிகள் அவர்கள் நமது அரங்கிற்கு வருகை புரிந்தார்.

நமது சமயமன்ற அரங்கிற்கு சங்கரா கண் மருத்துவமனை தலைவரும் ஸ்ரீமடத்தின் அத்யந்த பக்தருமான ஸ்ரீ.விஸ்வநாதன் அவர்கள் வருகை புரிந்தார்கள்.

இன்று நமது இந்துசமய மன்ற அரங்கிற்கு மாண்புமிகு நீதியரசர் ஸ்ரீ.P.R.ஜோதிமணி அவர்கள் வருகை புரிந்தார். அவருக்கு நமது மாநில அமைப்பாளர் சகோதரி ஸ்ரீமதி கௌரி வெங்கட்ராமன் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்கள். அருகில் ஸ்ரீ.ஸ்ரீதர் அவர்கள், ஸ்ரீசாயி.ராமலிங்கம், தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஸ்ரீராம் அவர்களும் உள்ளனர்.

மேலே இந்து மக்கள் கட்சி திரு.அர்ஜுன் சம்பத் அவர்கள் நமது சமயமன்ற அரங்கிற்கு வந்தபோது.

கவிஞர் சாணுபுத்திரன் நமது சமயமன்ற அரங்கிற்கு வந்தபோது

பிஜேபியின் இளம்தலைவர் திரு.கே.டி.இராகவன் மற்றும் பிஜேபி கோட்டப்பொறுப்பாளர் பா.பாஸ்கர் நமது சமயமன்ற அரங்கிற்கு வந்தபோது

மன்னார்குடி பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீசெண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் ஸ்வாமிகள் நமது சமயமன்ற அரங்கிற்கு இன்று விஜயம் செய்து மன்றப்பணிகளுக்கு அனுக்ரஹித்த காட்சி

பி.ஸ்வாமிநாதன் நமது சமயமன்ற அரங்கிற்கு வந்தபோது

இந்து ஆன்மீக சேவை கண்காட்சி வெற்றிகரமாக நடைபெற காரணமான ஸ்ரீ.குருமூர்த்தி ஜி அவர்களை சந்தித்து அவருக்கும் அவர்தம் குழுவினருக்கும் நமது இந்துசமயமன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டோம்.

நமது சமயமன்ற அரங்கின் தோற்றம்

கண்காட்சி துவக்கவிழா நிகழ்ச்சிகள்

நந்திவரம் கூடுவாஞ்சேரி இந்துசமயமன்றம் கிளை அமைப்பாளர் திருமதி தாரா தேவராஜ் , திருவாசக முற்றோதுதல் குழு திருமதி. புஷ்பாதுரை, மற்றும் ஊரப்பாக்கம் இந்துசமயமன்றம் அமைப்பாளர் திருமதி. பார்வதிமோகன், திரு.மோகன் ஆகியோர் நேற்று நமது சமய மன்ற அரங்கிற்கு வந்திருந்து குரு கைங்கர்யத்தில் பங்குகொண்டனர்.

ஸ்ரீகுருப்யோ நம! அடியேனின் இதயங்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

ஸ்ரீகுருப்யோ நம!
நமது சனாதன ஹிந்து தர்ம மதத்தில் பலவிதமான பண்டிகைகள் ஒவ்வொரு பருவகாலத்திலும் கொண்டாடப்படுகிறது. அதில் தைத்திங்கள் முதல்நாள் மகர சங்கராந்தி என்றும் பொங்கல் திருநாள் என்றும் கொண்டாடப்படும் இத்திருவிழா “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்கிறபடி, புதுப்பானையில் புத்தரிசியிட்டு தித்திக்கும் வெல்லத்தோடு சேர்த்து சர்க்கரைப்பொங்கல் சமைத்து, இனிக்கும் கரும்போடு மங்கள மஞ்சள் கிழங்குடன் நமக்கு எந்நாளும் ஒளி கொடுக்கும் ஞாயிறை சூர்ய தேவனை போற்றி வணங்குவது. மறுநாள் உழவிற்கு பெரும் உதவியாய் இருக்கும் பசுவை, எருதினை வணங்கி பொங்கல் வைப்பது. மூன்றாவது நாள் தங்கள் சுற்றத்தார், நண்பர்களுக்கு வாழ்த்து பரிமாறி காணும்பொங்கலாய் கூடியிருந்து அளவளாவி மகிழ்வது. இதற்கெல்லாம் முந்தினநாள் “பழையன கழிதலும்” என்பதற்கேற்ப பழையனவற்றை ஒதுக்கி வைப்பது (டயரை, பிளாஸ்டிக்கை எரிப்பது அல்ல) போகிப்பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகைக்காலங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ரேக்ளா போட்டி, கோலப்போட்டி போன்ற தமிழர்களின் பண்டைய கலாச்சார பண்பாட்டு பொழுதுபோக்குகளும் இருக்கும்.இப்படி அர்த்தம் செறிந்த ஒரு பண்டிகையை நமது முன்னோர்கள் நமக்கு ஏற்படுத்தித்தந்திருக்கின்றனர். இந்த நாட்களில் நமக்கு என்றும் அருளும் இறைவனை, உதவும் பசுவை, தோள்கொடுக்கும் உறவை, நட்பை போற்றி மகிழ்வோம். நமது ஹிந்து மதத்தின் மிக உயர்ந்த நெறியை மதிப்போம். ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளின் அருட்கடாக்ஷத்துடன் அனைவரும் இந்த பொங்கல்திருநாளை மகிழ்வுடன் கொண்டாட எங்களின் இதயங்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன்
மற்றும்
திருமதி.கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்,
இந்துசமயமன்றம்.
ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தின் ஆன்மீக கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு.

காவனூர் கிராமத்தில் உள்ள ஆறு இருளர் குடும்பங்களுக்கு புத்தாடை மற்றும் உணவு வழங்கப்பட்டது

சிவாய நம! ஒரத்தூர் போலவே அருகில் உள்ள காவனூர் கிராமத்தில் உள்ள ஆறு இருளர் குடும்பங்களுக்கு புத்தாடை மற்றும் உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் காவனூர் ஊராட்சித்தலைவர் திரு.வெங்கடேசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர் நமது காஞ்சிப்பெரியவரின் மீது அபார பக்தியுள்ளவர். அவருக்கு ஸ்ரீகாஞ்சிப்பெரியவர் திருவுருவப்படம் வழங்கினோம். இவ்வூரில் உள்ள மக்களும் இல்லம்தேடி வந்து புத்தாடை, உணவு அளித்தமைக்கு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அனைத்தும் ஸ்ரீகாஞ்சி ஆசார்யாளின் அனுக்ரஹத்தில் நல்லபடியாக நடந்தேறியது.

அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்

சிவாய நம! தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் படப்பைக்கு அருகே உள்ளார்ந்த அழகிய கிராமம் ஒரத்தூர். இங்கு சுமார் இரண்டாயிரம் ஆண்டு மிகப்பழமையான அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. அவ்வூரின் குளக்கரையில் சுமாராக முப்பது இருளர் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். கூலிவேலை, காட்டில் விறகுவெட்டிப்பிழைத்தல் என ஆண்பெண் அனைவரும் அன்றாடங்காய்ச்சிகளாய் வாழ்க்கையை மிகுந்த ஏழ்மையான சூழலில் நகர்த்தி வருகிறார்கள். மிகத்தொன்மையான பழங்குடி மக்கள் இருளர் மக்கள். இவ்வளவு கஷ்ட ஜீவனத்திலும் அவர்களின் குல தெய்வ வழிபாடு, இசையுடன் நடனம் என அவர்களின் கலாச்சாரத்தை பேணிக்காத்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவிசெய்ய ஸ்ரீகாஞ்சி பெரியவர்கள் அருளினால் ஒரு வாய்ப்பு கிடைத்தது. தமிழர் திருவிழாவான பொங்கல் திருவிழாவிற்கு அவர்களுக்கு புத்தாடை எடுத்துக்கொடுத்து அவர்களுடன் கொண்டாட நினைத்து ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் சந்நிதியில் வேண்டி நின்றோம். ஸ்ரீபெரியவா மிகுந்த மகிழ்ச்சியாக இதற்கு ஆசியளித்து இதுபோன்ற மக்களுக்கு நிறைய செய்யுங்கள் எனக்கூறியருளினார்கள்.போதிய உதவிக்கு என்ன செய்வது என்ற கவலையுடன் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபாவைஅணுகி இதுபற்றி சொன்னோம். மேற்கொண்டு சபா அங்கத்தினர்களுக்கு ஒரு விண்ணப்பமும் அனுப்ப அந்த நல்ல உள்ளங்கள் வழங்கிய உதவியில் அனைத்து இருளர் மக்களுக்கும், சிறுகுழந்தை முதல் வயதான முதியவர்கள் வரை விடாமல் மிக நல்ல புத்தாடை வாங்கப்பட்டது. அதை ஸ்ரீபெரியவாளிடம் ஜனவரி 1ந்தேதி கொண்டுசென்று சமர்ப்பணம் செய்தோம். ஸ்வாமிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் குங்குமப்ரசாதம் அளித்து ஆசீர்வதித்தார். இன்று ஜனவரி 6ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை ஒரத்தூர் சென்று அம்மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தோம். ஒரத்தூர் ஊராட்சிச்செயலர் திரு.பார்த்தசாரதி அவர்கள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார். ஊராட்சித்தலைவர் திரு.கற்பகம் சுந்தர் அவர்கள்,தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் செயலாளர் ஸ்ரீராம், வண்டலூர் ஸ்ரீவழித்துணை பாபா கோவில் ஸ்தாபகர் டாக்டர் சாய்ராமலிங்கம், ஸ்ரீமணிகண்டன்ஜி,கூடுவாஞ்சேரி மன்ற அமைப்பாளர் திருமதி தாரா தேவராஜ், திருக்கோவில் எண்ணெய் வழங்கும் திட்ட பொறுப்பாளர் திரு.ராமச்சந்திரன், திரு.விஜயகுமார் சாந்தி தம்பதியர், ஊர் பிரமுகர் திரு.கோதண்டராமன் ஆகியோர் முக்கிய விருந்தினராக கலந்துகொள்ள நமது சமய மன்ற மாநில அமைப்பாளர் திருமதி. கௌரி வெங்கட்ராமன் அவர்கள் இறைவணக்கம் பாட, இருளர்களின் பாரம்பரிய இசை நடனத்துடன் விழா துவங்கியது. அனைத்து மக்களுக்கும் புத்தாடை வழங்கப்பட்டது. சிறப்பாக உணவு நமது சமய மன்ற உறுப்பினர் திரு. சந்திரநாத் மிஸ்ரா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு முன்னின்று பணத்தாலும், பொருளாலும், உடலாலும் ஒத்துழைத்த அனைவரும் நன்கு நலமுடன் வளமுடன் வாழ இறைவனை ப்ரார்த்தித்து கூட்டுப்ரார்த்தனை செய்தோம். உணவளித்து புறப்படும்போது அந்த மக்களின் அன்பு நம்மை நெகிழச்செய்தது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண்போம், மக்கள் சேவையே மாதவன் சேவை என்பதை ப்ரத்யக்ஷமாக உணர்ந்த தருணம் அது. அனைத்திற்கும் தோன்றாத்துணையாய் உள்ளிருந்து இயக்கும் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் கமல மலரடிகளை போற்றுகிறேன். இதுபோன்ற நற்செயல்கள் நிறைவேற உதவிடும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா உறுப்பினர்கள் அனைவருக்கும் அடியேன் மற்றும் என் அன்பு சகோதரி ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமனின் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் திருமதி.கௌரி வெங்கட்ராமன்.
மாநில அமைப்பாளர்கள்.
இந்துசமயமன்றம்.