லக்ஷ ருத்ராக்ஷ சிவ ஸஹஸ்ரார்ச்சனை பூஜை

இந்துசமயமன்றம் மற்றும் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் நேற்றைய தினம் 24.11.2019 ஞாயிறு காலை ஆதம்பாக்கம் அருள்மிகு ஆவுடைநாயகி உடனுறை ஸ்ரீநந்தீஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்ற லக்ஷ ருத்ராக்ஷ சிவ ஸஹஸ்ரார்ச்சனை பூஜை மிகச்சிறப்பாக நடைபெற்றது. கையிலாய வாத்திய இசையுடன் செல்வி சமன்விதா சீனிவாசனின் தேவாரம் முதலில் நடைபெற்றது. தித்திக்கும் திருவாசகத்தேனமுதை நாளெல்லாம் பாடிவரும் ஸ்ரீபழனிப்பாட்டி வருகைபுரிந்தார்கள். நந்திவரம் கூடுவாஞ்சேரி சமயமன்ற கிளை திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் திருவாசகம் பாடினர். பழனிப்பாட்டி மிக்க மகிழ்ச்சியுடன் அருளாசி வழங்கினார்கள்.அடுத்து சிவாய நம ஸ்ரீலட்சுமி நாராயணன் அவர்கள் குழுவினர் வேதபாராயணம் நடைபெற்றது. ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளுக்கு குருவந்தனம் தோடகாஷ்டகம் மற்றும் ஸ்வஸ்தி வசனம் புஷ்பம் சமர்ப்பிக்கப்பட்டது. ஸ்ரீசுப்ரமண்யம் அவர்கள் மூலமாக ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் பரமகருணையுடன் அருட் ப்ரசாதம் விழாவிற்கு அனுப்பி அருளாசி வழங்கினார்கள். கயிலாய வாத்தியம், தேவார திருவாசகம் பாராயணம், வேதபாராயண கோஷ்டி ஸ்ரீருத்ர த்ரிசதி மற்றும் சிவஸஹஸ்ரநாமம், அடியார்களின் சிவ கோஷம் என சிவ ஸஹஸ்ரார்ச்சனை வழிபாடு நாலாபுறமும் சிவநாமம் ஒலித்துக்கொண்டிருக்க ஸ்ரீநந்தீஸ்வரரும் ருத்ராக்ஷ லிங்கேஸ்வரரும் மிக அழகாக பீடத்தில் வீற்றிருக்க, கொல்லிமலையில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்படவுள்ள ஸ்ரீருத்ராக்ஷ லிங்கத்திருமேனிக்கு பக்தர்கள் அனைவரும் அவரவர் கரங்களினாலே ருத்ராக்ஷத்தினால் அர்ச்சனை செய்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சிவனடியார்கள் வேலூர், ஆம்பூர், திருவள்ளூர் என தமிழகம் மட்டுமன்றி புதுவையிலிருந்தும் வந்து குழுமியிருந்தார்கள்.ஒன்றுபட்ட ப்ரார்த்தனை மிகவும் பயனுடையது.ஒரு லக்ஷம் ருத்ராக்ஷ பூஜை நமது சைவ சமய வரலாற்றில் ஒரு மைல்கல். பூஜை நிறைவடைந்தவுடன் இனிதே ஆரத்தி மற்றும் ப்ரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பாஜக தலைவர் ஸ்ரீ.இல.கணேசன் வந்திருந்து பூஜையில் கலந்துகொண்டார். கவிஞர் சாணுபுத்திரன்,புலவர் ஸ்ரீ ராமச்சந்திரன், திண்டிவனம் SS மெடிக்கல் சிவஸ்ரீ.மனோகரன், விழுப்புரம் சிவஸ்ரீ.பொன்முடி என பல சிவனடியார்கள் கலந்துகொண்டனர்.திண்டிவனம் ஸ்ரீநாகராஜன் விழாவிற்கு புஷ்பம் அனுப்பியும், ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா பல கைங்கர்யங்களையும் , திண்டிவனம் கூட்டேரிப்பட்டு ஸ்ரீ.SS மனோகரன் ருத்ராக்ஷ லிங்கம் செய்து அளித்தும் உதவினர். ஸ்ரீநந்தீஸ்வரர் கோவில் ஸ்தானீகம் சிவஸ்ரீ.சீதாராம குருக்கள் விழாவிற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் இன்முகத்துடன் செய்து கொடுத்தார்.வரமுடியாத நிலையில் பல அன்பர்கள் தமிழகம் முழுவதிலுமிருந்து அர்ச்சனை செய்த ருத்ராக்ஷ ப்ரசாதம் வேண்டியுள்ளனர். அனைவருக்கும் அனுப்ப உள்ளது.
இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேற உதவிய அனைத்து அன்பர்களுக்கும் இந்துசமயமன்றம் மற்றும் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் நன்றிகள்!
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்,
திருமதி. கௌரி வெங்கட்ராமன்
மாநில அமைப்பாளர்கள்,
இந்துசமயமன்றம்.
திரு.கே.ஸ்ரீராம்,
பொதுச்செயலாளர்,
திரு.கண்ணன்,PRO
தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு.

நேற்று 24.11.2019 ஞாயிறு அன்றுஆதம்பாக்கம் ஸ்ரீநந்தீஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற லக்ஷருத்ராக்ஷ சிவ ஸஹஸ்ரார்ச்சனையில் பங்கு பெற்ற அன்பர்கள் சுமார் 1800க்கும் மேல்.
மாலை தரிசித்து ருத்ராக்ஷ ப்ரசாதம் பெற்றோர்கள் சுமார் 3000க்கும் மேல்.

தென்னாடுடைய சிவனே போற்றி!

திருக்காஞ்சி பீட குருவே போற்றி!

காஞ்சி டைம்ஸ் பத்திரிகையில் நமது இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற்ற இலவச கண் கண்ணாடி வழங்கிய விழா, ஒரத்தூர் இருளர் பகுதியில் தீபாவளிக்கு இனிப்பு வழங்கிய நிகழ்ச்சி, இந்துசமயமன்றத்தின் நற்பணிகளை பாராட்டி அமைப்பாளர்களுக்கு ‘தர்மரத்னா ‘ விருது சுதேசி பத்திரிகை சார்பில் வழங்கிய விழா நிகழ்ச்சி என அனைத்தும் வெளிவந்துள்ளது. இது போன்ற நல்ல தவறாது் வெளியிடும் அருமை நண்பர் திரு.கருணாகரன் அவர்களுக்கு மிக்க நன்றி!

இந்து சமய மன்றம் சார்பில் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஸ்ரீகுருப்யோ நம!
தீமையை அழித்து நன்மையை அளித்து உலகுக்கு கீதையை உபதேசம் பண்ணின ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவை ஸத்யபாமையின் மனம் கவர்ந்த மணாளனை இந்த தீபாவளி நன்னாளில் வணங்குவோம்.!

ஜகத்குரு என்கிற உயர்ந்த அதிஉன்னத நிலை ஸ்ரீகிருஷ்ணனுக்கும் அடுத்து நமது ஆதிசங்கராச்சாரியாளுக்குமே உண்டு. அவர்வழிவந்த ஆசார்யாள் அத்துணை பேரின் கமலபாதங்களை அஞ்ஞானம் என்ற தீமை அகன்று மெய்ஞானம் பெற வணங்குவோம்!

பாரதீய கலாச்சாரத்தை அதன் பாரம்பரிய பண்பாட்டு பெருமைகளை உள்வாங்கி இந்த நல்லநாளில் சனாதன இந்து தர்மத்தை எந்நாளும் விட்டுக்கொடுக்காமல் உற்றசகோதரர்களாக வாழ உறுதி ஏற்போம்!

இந்து சமய மன்றம் சார்பில் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அமைப்பாளர்கள்,
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்து சமய மன்

இருளர் பகுதியில் இந்துசமயமன்றம் சார்பில் இனிய தீபாவளி விழா

26.10.19 சனிக்கிழமை காலை காஞ்சி மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா ஒரத்தூர் இருளர் பகுதியில் இந்துசமயமன்றம் சார்பில் இனிய தீபாவளி விழா ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா மற்றும் மாடம்பாக்கம் ஜனகல்யாண் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. ஒரத்தூர் முதல்நிலை ஊராட்சி முக்கிய ப்ரமுகர் திரு.சுபாஷ், திரு.பார்த்தசாரதி, இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர்கள் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன், திருமதி.கௌரி வெங்கட்ராமன், ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா திருமதி.ப்ரபா ஸ்ரீனிவாசன், நமது சமயமன்றத்துடன் இணைந்து சேவை செய்யும் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு.ஸ்ரீராம், மக்கள் தொடர்பு அதிகாரி திரு.கண்ணன், மாவட்டத்தலைவர் ஸ்ரீ.ராமச்சந்திரன், நந்திவரம் கூடுவாஞ்சேரி தலைவர் ஸ்ரீ.சாயிராம் ஆகியோர் கலந்துகொண்டனர். திரளாக இருளர்மக்கள் கலந்துகொண்டனர்.

இந்துசமயமன்றம் சார்பில் ஒரத்தூர் இருளர் மக்களோடு இனிய தீபாவளி விழா

ஸ்ரீகுருப்யோ நம!
காஞ்சி மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா ஒரத்தூர் இருளர் மக்கள் வாழும் பகுதியில் நமது இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஆசார்யஸ்வாமிகள் அருளாசியோடு ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஆதரவுடன் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்ய முனைந்துள்ளோம்.விஜயதசமிக்கு வித்யஜோதி திட்டம் துவங்கி கல்விக்கு உதவுதல் மற்றும் ஔஷதஜோதி திட்டம் துவங்கி கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கடந்த வருடம் போலவே இந்த வருடமும் தீபாவளிக்கு இனிப்பு காரம் பிஸ்கட் ஆகியவை வழங்கி இருளர் மக்களோடு இணைந்து கொண்டாட முடிவு செய்யப்பட்டு வருகிற 26.10.19 சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் நமது சமயமன்ற அன்பர்களுடன் விழா நடத்தப்பட உள்ளது. நமக்கு என்றும் உதவிக்கரம் நீட்டும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா மற்றும் இம்முறை நம்மோடு தீபாவளி விழாவில் மாடம்பாக்கம் ஜனகல்யாண் இயக்கமும் பங்கேற்கிறது.ஒரத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திருமதி. கற்பகம் ND சுந்தர் அவர்கள் மற்றும் ஊர்பெரியவர்கள் விழாவில் பங்கேற்கின்றனர்.

19.10.2019 நேற்று சுதேசி பத்திரிகை சார்பில் வழங்கப்பட்ட தர்மரத்னா விருதினை இன்று 20.10.19 ஞாயிற்றுக்கிழமை காலை அச்சிறுப்பாக்கத்தில் ஸ்ரீமடத்தின் முகாமில் ஸ்ரீபெரியவா சந்நிதியில் சமர்ப்பித்து அடியேனும் அருமை சகோதரி ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமன் அவர்களும் ஆசி பெற்றோம். அருகில் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீகண்ணன்ஜி.

மனிதநேய சாதனையாளர்களுக்கு விருது

19.10.2019 சனிக்கிழமை சென்னை அடையாறு போட்கிளப்ரோடில் அண்ணா பல்கலைக்கழக அலுமினி கிளபில் சுதேசி பத்திரிகை சார்பில் நடந்த வருடாந்திர பல்துறைசார்ந்த மனிதநேய சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர்கள் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் ஸ்ரீமதி.கௌரிவெங்கட்ராமன் ஆகியோருக்கு “தர்மரத்னா” விருது தமிழக முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே அவர்கள் வழங்கினார்கள். சமயமன்றத்தின் ஆன்மீக சமுதாய சேவைப்பணிகள், பழங்குடி இருளர் மக்களுக்கு ஆற்றிவரும் சேவைகள், மனிதநேய மக்கட்பணிகள் ஆகியவற்றிற்காக இந்த விருது வழங்கப்பட்டது. சுதேசி பத்திரிகை ஆசிரியர் திருமதி. பத்மினிரவிச்சந்திரன், சென்னை மாநகர முன்னாள் மேயர்.சைதை.துரைசாமி, துபாய் தமிழ் குடும்பம் ஸ்ரீ.ஆர்எஸ்.ரமணி, ஸ்ரீமாதாகேன்சர்கேர்.டாக்டர்.விஜயஸ்ரீமகாதேவன், சாவித்திரி பவுண்டேஷன் ஸ்ரீ. ஜே.பாலசுப்பிரமணியன் மற்றும் திரளான சுதேசி வாசகர்கள், அன்பர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு துறையைச்சேர்ந்த சாதனையாளர்களுடன் பழகும் அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. இது பொதுசேவையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஆகும். அனைத்திற்கும் காரணமாக அமைந்து ஆட்டுவிக்கும் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் திருவடிக்கமலங்களில் இந்த விருதினை பக்தியுடன் சமர்ப்பிக்கிறோம்.
புலவர். க.ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன்.
அமைப்பாளர்கள், இந்துசமய மன்றம்.

ஸ்ரீகுருப்யோ நம!

ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் அருளாசியோடு அவரால் தோற்றுவிக்கப்பட்ட இந்துசமயமன்றம் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் மறுமலர்ச்சியுடன் தற்போது பல ஆன்மீக சமுதாய நற் பணிகளை செய்து வருகிறது. நமது சமயமன்ற செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும்விதமாக சுதேசி பத்திரிகை நிர்வாகக்குழு திருமதி.பத்மினி ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் கூடி நமக்கு “தர்ம ரத்னா” என்கிற விருதினை வழங்கிட அறிவித்துள்ளார்கள். வருகிற 19.10.19 சனிக்கிழமை மாலை சென்னையில் பல மனிதநேய ஆர்வலர்கள் மற்றும் சென்னை முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளும் விழாவில் சமயமன்ற மாநில அமைப்பாளர்கள் அடியேன் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் திருமதி கௌரி வெங்கட்ராமன் ஆகியோர் இந்த விருதினை இந்துசமயமன்ற அன்பர்கள் சார்பில் பெற்றுக்கொள்கிறோம்.இந்த விருது பற்றி ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் திருமுன்னிலையில் கூறியபோது மிக மகிழ்ச்சியுடன் வாழ்த்தி அருளாசி வழங்கினார்கள். சமயமன்றப்பணிகளுக்கு கிடைத்த மகத்தான அங்கீகாரம் இது.