ஸ்ரீகாஞ்சி பெரியவர் அருளாசியுடன் வாழ்க வளமுடன் நலமுடன்! இந்துசமயமன்றம் சார்பில் அனைவருக்கும் அக்ஷயதிருதியை வாழ்த்துக்கள்!
Tag: Hindu Samaya Mandram
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இன்று புதிய தமிழ் வருடப்பிறப்பு. “சார்வரி” என்ற பெயருடன் உதயமாகும் இந்த வருடம் எல்லோருக்கும் நல்வாழ்வை அளிக்கட்டும். கொடிய தொற்றுநோயின் பிடியில் இருந்து மக்கள் மீண்டு வரட்டும். மக்களின் மனதில் நல்ல எண்ணங்கள் வளரட்டும். ஆன்மீகம் செழிக்கட்டும். நமது சனாதன ஹிந்து தர்மம் உலகெங்கும் பரவி உலகில் சாந்தியும் தயாரானதும் தெய்வசிந்தனைகளும் வளரட்டும்.
இவையனைத்தும் ஈடேற காஞ்சி மாமுனிவர் கமலமலரடிகள் அருளாசி வழங்கட்டும்.
‘அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என்பதுபோல் அதற்கும் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் பொற்பதங்களில் ப்ரார்த்திப்போம்.
அனைவருக்கும் இந்துசமயமன்றம் சார்பில் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன்
மாநில அமைப்பாளர்கள்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்து சமய மன்றம்.
இந்துசமயமன்றம் சார்பில் இருளர் பகுதியில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.
12.04.2020 ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீபெரும்புதூர் வட்டம் ஒரத்தூர் கிராமத்தில் இருளர் மக்கள் குடியிருப்பில் நமது இந்துசமயமன்றம் சார்பில் மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,ஒரத்தூர் கிராம முன்னாள் தலைவர் ஸ்ரீ. கற்பகம் ND சுந்தர் அவர்கள், ஸ்ரீ.சுபாஷ், ஊராட்சி செயலாளர் ஸ்ரீ.பார்த்தசாரதி, திரு.ராஜா (Airport authority ), அம்பிகா ஜீவல்லர்ஸ் உரிமையாளர் ஸ்ரீ.விமல்ராஜ், ஸ்ரீநந்தீஸ்வரர் உழவாரப்பணிமன்ற செயலர்.S.மணிவண்ணன்,இந்துசமயமன்றம் திருக்கோவில் எண்ணெய் வழங்கும் திட்டப்பொறுப்பாளர் ஸ்ரீ.இராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மக்களும் முக்கியஸ்தர்களும் சமூக இடைவெளியை அனுசரித்து நடந்துகொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் முககவசம் ஊராட்சி சார்பில் வழங்கப்பட்டது.
மக்களுக்கு வழங்கப்பட்ட மளிகை மற்றும் காய்கறிகள் பொருட்கள்.
1.மஞ்சள் தூள்
2.குழம்பு மிளகாய் தூள்
- பாசிப்பருப்பு
4.கடலைப்பருப்பு
5.மிளகு
6.சீரகம்
7.வெந்தயம்
8.கடுகு
9.மிளகுத்தூள்
10.புளி
11.கல் உப்பு
12.சிறுதானிய தோசை மாவு
13.தேயிலைத்தூள் - குளியல் சோப்பு
15.துணி துவைக்க சோப்பு
16.பிஸ்கெட் பேக்கட்
17.உளுத்தம்பருப்பு
18.வெங்காயம்
19.தக்காளி
20.முள்ளங்கி
21.உருளைக்கிழங்கு
இவையனைத்தும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா அன்பர்கள் மற்றும் கூடுவாஞ்சேரி அன்பர்கள் பேராதரவுடன் வழங்கப்பட்டது.
பூஜ்யஶ்ரீ சங்கரவிஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்தோத்திரம்
பூஜ்யஶ்ரீ சங்கரவிஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய
ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்தோத்திரம்
மொழிபெயர்ப்பு: பி.ஆர்.கண்ணன்
भजेऽहं भगवत्पादं भारतीयशिखामणिम् । अद्वैतमैत्रीसद्भावचेतनायाः प्रबोधकम् ॥१॥
பஜேஹம் பகவத்பாதம் பாரதீயஶிகாமணிம் | அத்வைதமைத்ரீஸத்பாவசேதநாயாஃ ப்ரபோதகம் ||1||
பாரதீயர்களின் சூடாமணியாகவும், அத்வைதத்தின் மூலம் நட்பு, நல்லுறவு எண்ணங்களை எழுப்புபவராகவும் உள்ள ஶ்ரீஆதிசங்கர பகவத்பாதர்களை நான் வணங்குகிறேன்.
अष्टषष्टितमाचार्यं वन्दे शङ्कररूपिणम् । चन्द्रशेखरयोगीन्द्रं योगलिङ्गप्रपूजकम् ॥२॥
அஷ்டஷஷ்டிதமாசார்யம் வந்தே ஶங்கரரூபிணம் | சந்த்ரஶேகரயோகீந்த்ரம் யோகலிங்கப்ரபூஜகம் ||2||
68வது ஆசாரியர்களான, ஸாக்ஷாத் சிவஸ்வரூபியான, யோகிகளில் சிறந்தவரும், யோகலிங்கத்தினை பூஜிப்பவருமான, ஶ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நமஸ்கரிக்கிறேன்.
(யோகலிங்கம் ஆதிசங்கரரால் கைலாஸத்தினின்று கொண்டுவரப்பட்ட ஐந்து சிவலிங்கங்களில் ஒன்று. அவரால் காஞ்சியில் சங்கர மடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.)
वरेण्यं वरदं शान्तं वदान्यं चन्द्रशेखरम् । वाग्मिनं वाग्यतं वन्द्यं विशिष्टाचारपालकम् ॥३॥
வரேண்யம் வரதம் ஶாந்தம் வதாந்யம் சந்த்ரஶேகரம் | வாக்மிநம் வாக்யதம் வந்த்யம் விஶிஷ்டாசாரபாலகம் ||3||
ஒளியிற் சிறந்தவரும், வரமருளுபவரும், சாந்தஸ்வரூபியும், கொடைவள்ளலும், வாக்குவன்மை மிக்கவரும், கட்டுப்பட்ட வாக்கினையுடையவரும், எல்லோராலும் வணங்கத்தக்கவரும், ஆசாரங்களைக் காப்பதில் விசேஷ ஆர்வம் கொண்டவருமான ஶ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நமஸ்கரிக்கிறேன்.
देवे देहे च देशे च भक्त्यारोग्यसुखप्रदम्। बुधपामरसेव्यं तं श्रीजयेन्द्रं नमाम्यहम् ॥४॥
தேவே தேஹே ச தேஶே ச பக்த்யாரோக்யஸுகப்ரதம்| புதபாமரஸேவ்யம் தம் ஶ்ரீஜயேந்த்ரம் நமாம்யஹம் ||4||
ஈஸ்வர பக்தி, தேக ஆரோக்கியம், தேசத்தில் சுகமான வாழ்வு ஆக்யவற்றை அருள்பவரும், சான்றோர் முதல் பாமரர் வரை எல்லோராலும் வணங்கப்படுபவருமான ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன்.
वृत्तवृत्तिप्रवृत्तीनां कारणं करणं प्रभुम् । गुरुं नौमि नताशेषनन्दनं नयकोविदम् ॥ ५ ॥
வ்ருத்தவ்ருத்திப்ரவ்ருத்தீநாம் காரணம் கரணம் ப்ரபும் | குரும் நௌமி நதாஶேஷநந்தநம் நயகோவிதம் || 5 ||
சரித்திரம் படைப்பவரும், நன் நடத்தை (அல்லது நல் தொழில்), நல்ல செயல்பாட்டினையும் அருள்பவரும், வணங்குபவர் அனைவரையும் மகிழ்விப்பவரும், நீதியை நயம்பட நடத்துபவருமான குரு ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன்.
प्रजाविचारधर्मेषु नेतारं निपुणं निधिम् । वन्देऽहं शङ्कराचार्यं श्रीजयेन्द्रसरस्वतीम् ॥ ६ ॥
ப்ரஜாவிசாரதர்மேஷு நேதாரம் நிபுணம் நிதிம் | வந்தேஹம் ஶங்கராசார்யம் ஶ்ரீஜயேந்த்ரஸரஸ்வதீம் || 6 ||
ஜனங்களை நல்வழிப்படுத்தும் தலைவரும், ஆராய்ந்து முடிவு செய்வதில் நிபுணரும், தர்மத்தின் பொக்கிஷமாகவும் உள்ள சங்கராசாரியார் ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன்.
सितासितसरिद्रत्नमज्जनं मन्त्रवित्तमम् । दानचिन्तामणिं नौमि निश्चिन्तं नीतिकोकिलम् ॥७ ॥
ஸிதாஸிதஸரித்ரத்நமஜ்ஜநம் மந்த்ரவித்தமம் | தாநசிந்தாமணிம் நௌமி நிஶ்சிந்தம் நீதிகோகிலம் ||7 ||
ஆறுகளில் ரத்தினமாகிய வெண்மை, நீல நிற ஆறுகளில் (கங்கை, யமுனை) நீராடுபவரும், மந்திரம் அறிந்தோரில் மிகச்சிறந்தவரும், கொடையில் சிந்தாமணி போன்றவரும், கவலையற்றவரும், நீதியைப் பாடும் குயிலாகவும் உள்ள ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன்.
सरस्वतीगर्भरत्नं सुवर्णं साहसप्रियम् । लक्ष्मीवत्सं लोलहासं नौमि तं दीनवत्सलम् ॥ ८ ॥
ஸரஸ்வதீகர்பரத்நம் ஸுவர்ணம் ஸாஹஸப்ரியம் | லக்ஷ்மீவத்ஸம் லோலஹாஸம் நௌமி தம் தீநவத்ஸலம் ||8 ||
ஸரஸ்வதி அம்மாளின் வயிற்றில் ரத்தினமாக உதித்தவரும், பொன்போன்ற புகழ் படைத்தவரும், தைரியச்செயல்களில் பிரியமுள்ளவரும், ஸாக்ஷாத் லக்ஷ்மிதேவியின் திருக்குழந்தையும், மனங்கவர் புன்னகையுள்ளவரும், எளியவர்களிடம் பேரன்பு கொண்டவருமான ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன்.
(ஆசாரியாளின் தாயார் பெயர் ஸரஸ்வதி; ஆனால் லக்ஷ்மியின் சேயாகவும் அவர் இருப்பதினால், அவர் தொடுவதெல்லாம் பொன்னாகிறதே.)
गतिं भारतदेशस्य मतिं भारतजीविनाम्। वन्दे यतिं साधकानां पतिमद्वैतदर्शिनाम् ॥९॥
கதிம் பாரததேஶஸ்ய மதிம் பாரதஜீவிநாம்| வந்தே யதிம் ஸாதகாநாம் பதிமத்வைததர்ஶிநாம் ||9||
பாரததேசத்தின் லக்ஷியமாகவும், பாரதீயர்களின் புத்திசக்தியாகவும், அத்வைத வேதாந்த சாதகர்களுக்கு வழிநடத்தும் தலைவராகவும் உள்ள யதீஸ்வரர் ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன்.
इति श्रीशङ्करविजयेन्द्रसरस्वतीशङ्कराचार्यस्वामिभिः विरचिता श्री जयेन्द्रसरस्वती श्लोकमालिका.
இதி ஶ்ரீஶங்கரவிஜயேந்த்ரஸரஸ்வதீஶங்கராசார்யஸ்வாமிபிஃ விரசிதா ஶ்ரீ ஜயேந்த்ரஸரஸ்வதீ ஶ்லோகமாலிகா.
சங்கராசாரியார் ஶ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளைப்பற்றிய ஸ்தோத்திரம் முற்றுப்பெற்றது.
ॐ तत् सत्
இந்துசமயமன்றம் சார்பில் வேண்டுகோள்
ஸ்ரீகுருப்யோ நம!
வணக்கம். மிகக்கொடூரமான கொரோனா வைரஸின் கோரதாண்டவம் உலகம் முழுவதும் இருக்கிறது. இதிலிருந்து உலகம் மீண்டுவர தெய்வத்தை வேண்டுவோம். காஞ்சியின் கருணைத்தெய்வம் ஸ்ரீமஹாபெரியவரை மனதார ப்ரார்த்திப்போம்.
மத்திய மாநில அரசுகளின் உத்தரவை மதித்து நடப்போம்.
சமூக விலகலையும் சுகாதாரத்தையும் முன்னெடுப்போம்.
நாம் வாழும் இப்பூவுலகில் நம்மைச்சுற்றி வாழ்பவர்கள் நலனைப்பேண நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம்.
ஏழைகளுக்கு ஏதாவதொரு வகையில் அத்தியாவசிய பொருட்கள் முடிந்ததை வாங்கிக்கொடுப்போம்.
தெருவில் சுற்றும் மாடுகளுக்கு வாயிலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதன் தாகம் தீர்க்க முயற்சிப்போம். காய்கறிகள் பழங்கள் இவற்றின் தோல் அது சாப்பிடக்கூடிய உணவுப்பொருட்களை கொடுப்போம்.
தெருவில் பசியோடு அலையும் நாய்களுக்கு முடிந்தது எஞ்சிய உணவையாவது தருவோம்.
காக்கைக்கு தினமும் சாதம் வைப்போம்.
பறவைகளுக்கு ஒரு கிண்ணத்தில் நீர் வைப்போம்.நெல்மணிகள் அல்லது ஏதாவது தானியங்களை போட்டுவைப்போம்.
நாம் செய்யும் இச்சிறு உதவிகள் அந்த ஜீவன்களுக்கு பசியாற உதவும்.
இது மிகப்பெரிய தர்மம்.
தர்மம் தலை காக்கும் என்பது வேதவாக்கு.
நிச்சயம் அனைவரும் காக்கப்படுவோம்.
அதிகமாக நிதி இருந்தால்தான் உதவி செய்யவேண்டுமென்பதில்லை. மனமிருந்தாலே போதும்.
இந்துசமயமன்றம் மனித மனங்களின் ஒருமித்த ஈடுபாட்டில் செயல்படும் அமைப்பாகவே ஸ்ரீமஹாபெரியவர் உருவாக்கினார்கள். நம் காஞ்சி ஸ்ரீமடத்தின் ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன்
நாமும் இதை பின்பற்றுவோம். நம் தலைமுறையை காப்போம்.
ஸ்ரீமஹாபெரியவர் திருவடிகள் போற்றி! போற்றி !
“ஸ்ரீராமநவமி”
ஸ்ரீகுருப்யோ நம!
“ராமோ விக்ரஹவான் தர்ம”
தர்மங்களின் திருவுருவாகத்திகழ்ந்தவன் ஸ்ரீராமன்.
“ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசராத்மஜம்”
ஒப்புயர்வில்லா பரம்பொருள் தசரத மஹாராஜாவின் திருக்குமரனாக, மன்னு கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனாய் அவதரித்து சகல மனித தர்மங்களையும் அனுஷ்டித்து நமக்காக அருளினான் என்பது மகரிஷி வாக்கு.
ஒரு வில், ஒரு சொல், ஒரு இல்(மனைவி) என வாழ்ந்து காட்டிய அவதாரபுருஷன் ஸ்ரீராமன்.
வேய்புனர்பூசமும் விளங்கு கற்கடகமும் அவன் தோன்றியதால் பெருமை பெற்றது.
கல்லிலே கால்வண்ணம் (அகலிகை சாப விமோசனம்), போரிலே வில் வண்ணம் (அசுர வதம்) என அவனால் பூமி புனிதமடைந்தது.
படகோட்டி குகனும், வானர சுக்ரீவனும், அசுர விபீஷணனும் தன் சகோதரர்களாய் ஏற்றான். வாயுகுமாரனை தான் பெற்ற பிள்ளையாய் அன்புசெலுத்தினான். சத்தியத்தையும் தர்மத்தையும் அவை வெல்லும் திறத்தையும் காட்டுகிறது ஸ்ரீராமசரிதம்.அவன் அவதரித்த நன்னாளில் நாம் அவன் திருநாமத்தை பலமுறை உச்சரித்து வணங்குவோம். கலியுகத்தில் ராமநாமமே அருமருந்து என பல மஹான்கள் அருளியுள்ளனர்.
இன்றைய உலகம் கொரோனா என்னும் விஷக்கிருமியால் மிகுந்த துயரத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நேரத்தில் நாமனைவரும் ஸ்ரீராமநாமத்தை இயன்றவரை ஜபம் பண்ணுவோம்.ஸ்ரீராமன் சீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமத் சமேதனாய் வில்லேந்திய தேவனாய் வந்து நமக்கு அருள்புரியட்டும்.
அனைவருக்கும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீராமநவமித்திருநாள் வாழ்த்துக்கள்!
ஜெய் ஸ்ரீராம்!
இனிய யுகாதி நல்வாழ்த்துக்கள்
ஸ்ரீகுருப்யோ நம!
அனைத்து அன்பர்களுக்கும் இனிய யுகாதி நல்வாழ்த்துக்கள்!
இப்புத்தம்புதிய புத்தாண்டு நமக்கு நோயில்லா வாழ்வினை கொண்டுவரட்டும்.நலமுடன் வளமுடன் அனைவரும் வாழ ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் கமலமலரடிகளை ப்ரார்த்திக்கிறோம்.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
மாநில அமைப்பாளர்கள்
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு.
திருவிளக்கு பூஜை
இந்துசமயமன்றம் சார்பில் உலகநலன் வேண்டி அவரவர் இல்லங்களில் ப்ரார்த்தனை நாள்: 22.03.2020 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 8 மணிமுதல் 8.30 மணிவரை
அன்புடையீர்!
எல்லாம்வல்ல இறைபரம்பொருளின் அருளாலும் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் குருவருளாலும் அனைவருக்கும் நலமே விளைக! வருகின்ற 22.03.2020 ஞாயிற்றுக்கிழமை நாள்முழுவதும் கொரோனா தடுப்பு முயற்சியாக சுயகட்டுப்பாட்டுடன் அனைவரும் அவரவர் இல்லங்களில் இருக்க நமது பாரதப்பிரதமர் ஸ்ரீ.மோதிஜி அவர்கள் அறிவித்துள்ளார்கள். புனிதமான நமது பாரதபூமியில் கொடிய நோய்கள் அண்டாமல் இருக்கவும் நமது மக்களின் நலனில் அக்கறையோடு மத்திய மாநில அரசுகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு முழுமையாக நாம் ஒத்துழைப்பு தரவேண்டியது நமது தார்மீகக்கடமையாகும்.அன்றைய நாளில் காலை எட்டு மணியிலிருந்து எட்டரை மணிவரை அவரவர் இல்லங்களிலேயே குளித்து பூஜையறையில் அல்லது சுத்தமான இடத்தில் அமர்ந்து இஷ்ட தெய்வங்களை, ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரை மற்றும் நம் பாரதத்தின் புனித மஹான்களை மனதால் வணங்கி, ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், ஹனுமான் சாலீசா பாராயணம் செய்ய வேண்டுகிறோம். இந்த ஸ்லோகங்கள் சொல்லி பழக்கமில்லாதவர்கள் புனிதமான சிவ நாமத்தையோ அல்லது ராம நாமத்தையோ ஜபம் செய்யவும் ஸ்ரீகந்தர் சஷ்டிக்கவசம், தேவாரத்தில் நோய் தீர்க்கும் பதிகங்கள், கோளறு பதிகம் பாராயணம் செய்ய வேண்டுகிறோம். ஒரே நேரத்தில் காலை எட்டு மணியிலிருந்து எட்டரை மணிவரை உலக நலன் வேண்டி இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா அன்பர்கள் மற்றும் தெய்வீகப்பற்றுடைய அன்பர்கள் அனைவரும் ஒருசேர ப்ரார்த்தித்து கொடிய நோய் சவாலை எதிர்கொண்டு முறியடிப்போம்.
பல ஆயிரம் மைல்தாண்டி வேறுநாடுகளில் வாழ்ந்துவரும் நம் நண்பர்கள், உறவினர்கள், சகோதர சகோதரிகள் நலமாக வாழ ப்ரார்த்திப்போம்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் நலன் சார்ந்த பணிகளில் தங்களை ஈடுபடுத்தி அயராது உழைக்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள்,சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர்,மக்கள் நலப்பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள், அரசு ஊழியர்கள், அரசுப்பிரதிநிதிகள் அனைவரின் நலமான வாழ்விற்கும் ப்ரார்த்தனை செய்வோம்.ஸ்ரீகாஞ்சி யின் கருணைத்தெய்வம் மஹாஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் அனுக்ரஹம் அனைவருக்கும் கிடைக்க இந்துசமயமன்றம் ஹ்ருதயபூர்வமாக ப்ரார்த்தனை செய்கிறது.
“வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் “
அன்புடன்,
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்,
கௌரி வெங்கட்ராமன்.
மாநில அமைப்பாளர்கள்,
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான
இந்துசமயமன்றம்.
இந்துசமயமன்றம் சார்பில் உலகநலன் வேண்டி ப்ரார்த்தனை.
உலகம் முழுவதும் கொரானா வைரசின் கொடூர தாக்குதலில் நிலைகுலைந்து போயுள்ளது.நமது பாரத தேசத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வைரசின் தொற்று உள்ளதாக அறிக்கைகள் பகர்கிறது. இதிலிருந்து தப்பிக்க மற்றும் இந்த வைரசின் தொற்றை தவிர்க்க பல முன்யோசனைகளை மத்திய மற்றும் மாநில அரசாங்கம் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவற்றை கட்டாயம் அனைவரும்பின்பற்ற வேண்டுகிறேன்.
நமது காஞ்சி மாமுனிவர் நமக்கு பல உபாயங்களை பல நேரங்களில் நோயுடன் வந்தவர்களுக்கு உபதேசம் மூலமாக அருளியுள்ளார்கள். அதில் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், ஸ்ரீநாராயணீய பாராயணம், ஸ்ரீகாயத்ரி ஜபம், சிவ மற்றும் ராம நாம ஜபம் ஆகியவை. இது தவிர வைத்யநாதாஷ்டகம், ஸ்ரீகந்தர் சஷ்டிக்கவசம், தேவாரத்தில் பலன் தரும் பாராயணப்பதிகங்கள் ஓதுதல் ஆகியவை. இவற்றில் நம்மால் முடிந்ததை இயன்றவரை ஓதி நமக்காகவும் உலக நலனிற்காகவும் இறைவனிடமும் நமது ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளின் பொற்பதங்களிலும் வேண்டுவோம். தினமும் இதற்காக ஒரு சிறிது நேரம் ஒதுக்கி கட்டாயம் ப்ரார்த்தனை செய்ய வேண்டுகிறேன். கூட்டுப்ரார்த்தனை என்பது ஒரே இடத்தில் கூடி வேண்டுவது மட்டுமல்ல ஒரே நோக்கத்திற்காக அந்தந்த இடங்களில் இருந்தபடியே வேண்டவும் முழுப்பலன் கிடைக்கும். சமயமன்ற அன்பர்கள் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா அன்பர்கள் இந்த உத்தமமான ப்ரார்த்தனையில் பங்குபெற அடியேன் சார்பிலும் குழு அட்மின்கள் சார்பிலும் வேண்டுகிறேன்.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்.
அமைப்பாளர்கள்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான
இந்துசமயமன்றம்.