“மக்கள் தொண்டே மகாபெரியவா தொண்டு “

“மக்கள் தொண்டே மகாபெரியவா தொண்டு “
ஸ்ரீகுருப்யோ நம!
இந்துசமயமன்றம் அச்சரப்பாக்கம் கிளை சார்பில் பெரும்பேறுகண்டிகை கிராமத்தில் முதியோர் மற்றும் வீடற்றவர்களின் இல்லமான BIRD OLD AGE HOMEல் ஆடைகள் பொங்கலுக்கு வழங்கப்பட உள்ளது. அச்சிறுபாக்கம் கிளை இந்துசமய மன்றம் அமைப்பாளர் ஸ்ரீ.முருகப்ப ஆசாரியார் இந்த தொண்டினை செய்து வருகிறார். இந்த தடவை சமயமன்றம் மாநில அமைப்பு சார்பில் ஸ்ரீகாஞ்சி பெரியவர் ப்ரசாதம் மற்றும் ருத்ராக்ஷம், பிஸ்கட் பாக்கெட் சேர்த்து வழங்கப்பட உள்ளது.
“அறம் செய விரும்பு”

இந்துசமயமன்றம் திம்மாபுரம் அச்சிறுபாக்கம் கிளை சார்பில் பெரும்பேறுகண்டிகை கிராமத்தில் பேர்ட்(BIRD) முதியோர் இல்லத்தில் பொங்கல் திருநாளிற்கு ஆடை வழங்கும் நிகழ்ச்சி 14.01.2020 செவ்வாய் கிழமை நடைபெற்றது. இந்துசமயமன்றம் திம்மாபுரம் அச்சிறுபாக்கம் கிளை அமைப்பாளர் சைவத்திரு.முருகப்ப ஆச்சாரியார் அவர்கள், இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,முதியோர் இல்ல நிர்வாகி திரு.சங்கர் , திரு.சிங்காரவேலு ஆகியோர் பங்கேற்றனர். அமைதியான இயற்கையான சூழலில் முதியோர் இல்லத்தில் வீடற்ற மற்றும் உறவினர்களால் கைவிடப்பெற்ற முதியவர்கள் பராமரிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் விபூதிப்ரசாதம் கொடுத்து ஆறுதலாக சில வார்த்தைகள் கூறி அவர்களுக்காக ப்ரார்த்தனை செய்யப்பட்டது. மிகவும் மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்களை அன்புடன் பராமரிக்கிறார்கள். “மக்கள் தொண்டே மகாபெரியவா தொண்டு ” என இந்துசமயமன்றம் அன்பர்கள் இயன்றவரை இதுபோன்ற மக்களுக்கு உதவி செய்யுங்கள். இதுதான் மிகப்பெரிய புண்ணிய கைங்கர்யம்.

புத்தாடை வழங்கும் விழா

ஒரத்தூர் இருளர் குடியிருப்பில் 9.1.20 வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் பொங்கல் விழாவை முன்னிட்டு புத்தாடை வழங்கும் விழா இரண்டாவது ஆண்டாக மிகச்சீரும் சிறப்புமாக ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் விக்ரகஸ்வரூபியாக எழுந்தருள, ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் நடைபெற்றது. ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ரதத்தை ஊர்மக்கள் அனைவரும் வணங்கி வரவேற்று ஸ்ரீபாதுகைகளுக்கு புஷ்பாஞ்சலி செய்தனர்.இருளர் குடும்பங்களுக்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் நல்ல தரமான புத்தாடைகள் வழங்கப்பட்டது. முக்கிய விருந்தினராக செல்வி.இராஜேஸ்வரி(US), சமயமன்ற அமைப்பாளர்கள் புலவர். க.ஆத்ரேய சுந்தரராமன், ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமன், நந்திவரம் கூடுவாஞ்சேரி அமைப்பாளர். ஸ்ரீமதி.தாரா தேவராஜ், திருக்கோவில் தீபமேற்ற எண்ணெய் வழங்குதல் பொறுப்பாளர் இராமச்சந்திரன்,ஊர் முக்கியஸ்தர்கள் திரு.கோதண்டராமன், திரு.சுபாஷ், ஊராட்சி மன்ற செயலாளர் திரு. பார்த்தசாரதி மற்றும் பல அன்பர்கள் கலந்துகொண்டனர். இரவு இனிப்புகள் மற்றும் சுவையான உணவு அனைவருக்கும் திரு விஜயகுமார் & திருமதி. சாந்தி விஜயகுமார் தம்பதியினர் வழங்கினர். இதேபோல் அருகில் உள்ள காவனூர் திருத்துவெளி கிராம இருளர் குடியிருப்பு பகுதியில் இருளர் குடும்பங்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு, இரவு உணவு வழங்கப்பட்டது.திருத்துவெளி ஊர் முக்கியஸ்தர்கள் திரு. வெங்கடேசன் தலைமையில் ஸ்ரீகாஞ்சி பெரியவர் எழுந்தருளியுள்ள ரதத்தை வரவேற்று வணங்கினர்.

இந்துசமயமன்றம் சார்பில் பொங்கல் விழா!

ஸ்ரீகுருப்யோ நம!
ஸ்ரீபெரும்புதூர் வட்டம் ஒரத்தூர் கிராமம் இருளர் பகுதியில் இரண்டாம் ஆண்டாக பொங்கல்திருநாளை முன்னிட்டு புத்தாடை வழங்கும் விழா வருகிற 09.01.20 வியாழன் அன்று மாலை ஐந்து மணியளவில் ஒரத்தூரில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் நடைபெற உள்ளது. அனைவரும் வருக!
இவண்
அமைப்பாளர்கள்,
இந்துசமயமன்றம்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பு.

இன்று 28.12.2019 சனிக்கிழமை காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்திற்கு இந்துசமயமன்றம், சிவனார்அகரம் பெரியவாளை எழுந்தருளப்பண்ணி ஸ்ரீமஹாபெரியவர் அதிஷ்டானத்தில் ஸ்ரீமஹாபெரியவா வஸ்திரம், வில்வமாலை சாற்றி பூஜை நடந்தது. ஸ்ரீமஹாபெரியவாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்துசமயமன்றத்திற்கு அன்புடன் அளித்துதவிய ப்ரம்மஸ்

இன்று 27.12.2019 வெள்ளிக்கிழமை ஸ்ரீகாஞ்சி சங்கரமடத்தின் சென்னை ஆழ்வார்பேட்டை முகாமில் காலை தனுர்மாத பூஜை முடித்து ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள், பளிங்கு விக்ரகஸ்வரூபியாய் எழுந்தருளிய சிவனார்அகரம் பெரியவாளை வந்து பார்த்து சந்தோஷமடைந்தார்கள். இந்துசமயமன்றத்திற்கு அன்புடன் அளித்துதவிய ப்ரம்மஸ்ரீ. வெங்கட்ராமன் அவர்களுக்கு ஆசீர்வாத ப்ரசாதம் அளித்தார்கள்.
ஸ்ரீமஹாபெரியவாளை விக்ரகஸ்வரூபியாக எழுந்தருளப்பண்ணிக்கொண்டு சமயமன்ற பணிகள் நடக்கும் இடங்களுக்கும், பக்தர்கள் அழைப்பின்பேரிலும் அழைத்துச்சென்றுவர ஆசீர்வதித்தார்கள்.

சிவனார்அகரம் செல்ல வழிகாட்டிய அற்புதம்!

கடந்த 21.12.2019 மாலை 6.30 மணிவாக்கில் கூடுவாஞ்சேரி எனது இல்லத்தில் இருந்து சிவனார்அகரம் கிராமத்தில் ஸ்ரீமஹாபெரியவா ஆராதனையை முன்னிட்டு இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற இருந்த ஏகாதச ருத்ராபிஷேகம் வைபவத்திற்கு அடியேனும் சாணுபுத்திரன், ஸ்ரீராம், கண்ணன்ஜி, என ஒரு இருபதுபேர் ஒரு வேனில் கிளம்பினோம். ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் பளிங்கு விக்ரகஸ்வரூபியாய் அழைத்துச்சென்றோம். வண்டி வேப்பூர் வழியாக சுற்றி சென்றதில் ஏகப்பட்ட காலதாமதம். நடுவில் அச்சரப்பாக்கத்தில் இரவு உணவுக்கு வேறு தாமதம். இரவு இரண்டேகாலுக்கு கும்பகோணம் வந்தாயிற்று. அங்கு சில புஷ்பங்கள் வாங்கிக்கொண்டு சிவனார்அகரம் நோக்கி பயணம். கூகுள் மேப் உதவியிருப்பதால் வழியை கண்டுபிடித்து விடுவோம் என்று அசாத்திய நம்பிக்கை. வடமட்டம் என்ற ஊர் வழியாக செல்ல திட்டம். எஸ்.புதூர் தாண்டி ரைட்டில் திரும்புங்கள் என நண்பர் கூறினார். நாங்கள் எஸ் புதூர் தாண்டி ரைட்டில் திரும்ப சிவனார்அகரத்திற்கு போன் பண்ணினோம். ஒரு பாலம் வரும். அடுத்த தார் ரோடில் வாருங்கள் என சொன்னார்கள். கூகுள் மேப்பும் வழி சரியென்று சொல்ல அந்த வழியில் பயணப்பட்டோம். ஒரு கட்டத்தில் பாலத்தின் மேல் சென்றவுடன் சிக்னல் இல்லை. போன் பண்ணி வழி கேட்கவும் முடியாது. அதிகாலையென்றும் நடு ராத்திரி என்றும் சொல்லமுடியாத நேரத்தில் என்ன செய்வது என தெரியாமல் வண்டியை மேலே செலுத்தினோம். என்ன ஆச்சரியம்! அழகான குடிசை வீடு. மிக மிக சுத்தமாக மெழுகி கோலமிட்டு உள்ளது. உள்ளே ஒரு மண் அடுப்பில் பாத்திரத்தில் ஏதோ கொதிக்கிறது. வாசலில் ஒரு எழுபது எண்பது மதிக்கத்தக்க பெரியவர் எங்கே போகிறீர்கள் எனக்கேட்டார். விவரம் சொன்னோம். அவரோ மாறி வந்து விட்டீர்கள். இது எதிர்பக்க சாலை எனக்கூறி மிகச்சரியாக சிவனார்அகரம் கிராமத்திற்கு வழி சொன்னார். அவர் நின்று சொன்ன விதமும் அவருடைய வீடும் அவ்வளவு நேர்த்தி. வீடு தெய்வீகமாக இருந்தது. வீட்டில் உள்ளே ஒருவரும் இல்லை. அந்த நேரத்தில் அடுப்பு பற்றவைக்க வேண்டிய அவசியமும் அவருக்கு இருப்பதாகவும் தெரியவில்லை. மிகச்சிறிய அந்த ஓலை வீடு அவ்வளவு நேர்த்தியாக இருந்ததே ஆச்சரியம். உடனே நன்றி கூறி திரும்பி மிகச்சரியாக அவர் சொன்ன வழியில் திரும்பி சிவனார்அகரம் சென்றடைந்தோம். நடுவில் கோனேரிராஜபுரத்தில் எங்களை அழைத்துச்செல்ல அன்பர்கள் காரில் வந்திருந்தனர். நாங்கள் சந்தித்த அந்த பெரியவர் முகம் மறக்க வில்லை. இன்று காஞ்சி பெரியவருக்கு நடந்த ஆராதனையின்போது அதிஷ்டானத்தில் விக்ரஹஸ்வரூபியாக வீற்றிருக்கும் ஸ்ரீமஹாபெரியவா முகம் தரிசித்தவுடன் சட்டென்று நடு இரவு பேசிய பெரியவரின் முகம் நினைவில் வந்தது. அதே முகம். ஆஹா@ கலியுக வரதனாம் எம் ஆசார்யாள் அந்த நடுஇரவிலும் வழிகாட்ட நின்றாரே. அவர் இருக்கும் இடம் கோவிலாக அல்லவோ இருக்கும். அது போலவே ஒரு வீடு. ஞானாக்கினி அல்லவா அவர். அந்த வீட்டில் சாதாரண அக்னியில் எதையோ சமைப்பது நம்மை சீரமைத்து சமைக்கும் பக்குவ ஆன்மாக்களாய் மாற்றும் முயற்சியை சிம்பாலிக்காய் காண்பிக்கிறாரோ எனத்தோன்றியது. எங்களுடனேயே – தவறு தவறு – எங்களுக்கு வழிகாட்டி வந்த சிவனார்அகரம் பளிங்கு பெரியவா திருமுகத்தை பார்த்தேன். அதில் மர்மப்புன்னகை மட்டுமே இருந்தது. இதெல்லாம் அந்த சர்வேச்வர பெரியவாளுக்கு சர்வ சாதாரணம். உலகுக்கு வழிகாட்டிடும் பெரியவா தன் அடியவர்களுக்கும் அடியேனைப்போன்ற கடைநிலை எளியவனுக்கும் அந்த இரவில் வழிகாட்டி வந்தது எங்கள் பாக்கியம்.
“நாயேனையும் நயந்து ஒரு பொருளாக” நினைவில் நின்று ஆண்ட பெரியவா திருப்பதம் போற்றி! போற்றி!
புலவர். க.ஆத்ரேய சுந்தரராமன்,
இந்துசமயமன்றம்.

மஹாஸ்வாமிகளின் 26வது ஆராதனை

ஸ்ரீகுருப்யோ நம! இந்துசமயமன்றத்தின் ஸ்தாபகர் ஸ்ரீசங்கர பகவத்வதாசார்ய பரம்பராகத மூலாம்னாய சர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் 68வது ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகளின் 26வது ஆராதனை புனித நாளில் இந்துசமயமன்றம் ஸ்ரீசரணர்களின் பொற்பதங்களில் பக்தியுடன் அனேககோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறது. அமைப்பாளர்கள், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்து சமய மன்றம்.

ஏகாதச ருத்ராபிஷேகம் கண்டவர் மாலை கிராம யாத்திரை

சிவனார்அகரம் கிராமத்தில் மணிமண்டபத்தில் வீற்றிருந்து அருளப்போகும் ஸ்ரீமஹாபெரியவர் நேற்று 22.12.2019 ஞாயிறு அன்று காலை வேதோக்தமாக ஏகாதச ருத்ராபிஷேகம் கண்டவர் மாலை கிராம யாத்திரை அழகான சப்பரத்தில் பவனி கிளம்பினார். கூடவே பல கிராமக்குழந்தைகள் குதூகலமாக ஹரஹர சங்கர கோஷம் போட, ஊர் பொதுமக்கள் தெருவெங்கும் சாணிமெழுகி தெளித்து கோலம் போட்டு தேங்காய், புஷ்பம், பழத்தட்டுடன் நின்று ஸ்ரீமஹாபெரியவாளை வரவேற்க அந்த சிறு கிராமம் சங்கரரின் அனுக்ரஹபூமியாய், ஆனந்த பரவசமாய் காட்சியளித்தது.
காலை அனுக்ரஹ வேதம், மாலையில் ஊருக்கே அருளும் பேரருளாளனாய் தன் இரு பாதம் காட்டி வலம் வந்த பரமாச்சாரியார் பொற்பதம் எப்போதும் பணிவோம்.
இந்துசமயமன்றத்தினை தோற்றுவித்தவர் அவர். அதன் அனைத்து நிகழ்வுகளையும் நடத்துபவரும் அவரே.
ஹரஹர சங்கர!
ஜயஜய சங்கர!

ஏகாதச ருத்ர அபிஷேகம்

நாகை மாவட்டம் சிவனார்அகரம் கிராமத்தில் ஸ்ரீஜலமுகளாம்பிகை சமேத ஸ்ரீவாருணீச்வரஸ்வாமிக்கு, ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் 26வது ஆராதனை மஹோத்சவத்தைொட்டி இந்துசமயமன்றம் சார்பில் ஏகாதச ருத்ர அபிஷேகம் வேதோக்தமாக மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சிவனார்அகரத்தில் மணிமண்டபத்தில் எழுந்தருளப்போகிற ஸ்ரீமஹாபெரியவர், கும்பகோணம் சந்த்ரசேகரபவனம் ஸ்ரீமஹாபெரியவர் விக்ரஹஸ்வரூபமாக எழுந்தருளி அருள்பாலித்தனர். ஸ்ரீமஹாபெரியவா ஸ்ரீபாதுகைகளும் எழுந்தருளியது மிக விசேஷம். இந்தசமயமன்றம் சார்பில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கும்பகோணம் ப்ரம்மஸ்ரீ ப்ரபுசர்மா குழுவினர் இந்த வைபவத்தை நடத்தி வைத்தனர். நந்திவரம் ஸ்ரீ.நடராஜ சிவாச்சாரியார், தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஸ்ரீராம் சர்மா ஆகியோர் அபிஷேகங்களை செய்தனர்.குடந்தை நாகேஸ்வரஸ்வாமி கோவில் ஸ்ரீத்யாகராஜ குருக்கள் அம்பாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் பண்ணினார். கவிஞர் சாணுபுத்திரன், ஸ்ரீகண்ணன்ஜி தேஇதிகூட்டமைப்பு,முனைவர்.சிவசிதம்பர நாதன் இசம மற்றும் பலர் கலந்துகொண்டனர். சிவனார்அகரம் ப்ரம்மஸ்ரீ. வெங்கட்ராமன் அவர்கள் மற்றும் உறவினர்கள், கிராமத்தார்கள், விழா சிறப்பாக நடந்திட அனைத்து உதவிகளையும் செய்தார்கள். ஸ்ரீமஹாபெரியவருக்கு அழகான அந்த கிராமத்தில் மிக விசேஷமாக மணிமண்டபம் ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹத்துடன் விரைவில் கட்டப்பட உள்ளது.