உலக நன்மை வேண்டி இணைய வழியாக தமிழ்ப் பண்ணிசை வேள்வி

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சமுதாய சேவை அமைப்புகளான இந்து சமய மன்றமும் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து, இப்பெருந்தொற்றுக் காலத்தில் உலக நன்மைக்காக அன்றாடம் பாராயணம் செய்யவேண்டிய திருமுறை, திருப்புகழ் பாடல்களைத் தேர்வுசெய்து, மே மாதம் சனி, ஞாயிறுகளில் மாலை 5.00 முதல் 7.00 மணி வரை கூகுள் மீட் வழியாக தக்க பயிற்றுநர்களைக்கொண்டு பயிற்சியளிக்கவும் சேர்ந்திசையாகப் பாடவும் ஏற்பாடு செய்துள்ளன.
அந்தவைகையில்,
15.05.2021 சனிக்கிழமை கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் 57 வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ இராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் ஆசியுரையுடன் ஓதுவாமூர்த்திகள் திருமதி ரேவதி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் விருத்தாசலம் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் கி. சிவகுமார் அவர்களும் திருப்பாச்சிலாச்சிராமப் பதிகம், திருப்புள்ளிருக்குவேளூர்ப் பதிகங்களைப் பொருளுணர்த்தி, விண்ணப்பம் செய்கிறார்கள்.
16.05.2021 ஞாயிற்றுக்கிழமை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ஆம் பட்டம் குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் ஆசியுரையுடன் ஓதுவாமூர்த்திகள் திருமதி ரேவதி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் விருத்தாசலம் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் கி. சிவகுமார் அவர்களும் _ திருவதிகை வீரட்டானப் பதிகம், இடர்கெடு பதிகங்களைப் _ பொருளுணர்த்தி, விண்ணப்பம் செய்கிறார்கள்.
இந்த நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற, உலக நன்மைக்கான பண்ணிசை வேள்வியில் தாங்களும் ஒருவராய்ப் பங்கேற்க அழைத்து மகிழ்கிறோம்.

Google Meet link: https://meet.google.com/ghj-asys-hsk
Youtube link: https://www.youtube.com/channel/UCsLLZtA7LfTcNoCgN47l4yw

பரம பூஜ்யஸ்ரீ ஓங்காரானந்த ஸ்வாமிகள் மஹாஸமாதியடைந்துவிட்டார்கள்

பரம பூஜ்யஸ்ரீ ஓங்காரானந்த ஸ்வாமிகள் மஹாஸமாதியடைந்துவிட்டார்கள். ஹிந்து தர்மத்திற்கு மிகப்பெரிய பொக்கிஷமாக திகழ்ந்தவர். திருக்குறள் சொற்பொழிவு அவரைப்போல செய்ய எவராலும் இயலாது. வேத, உபநிஷத, ஸாஸ்த்ரங்களில் அபார ஞானத்துடன் சாதாரண பாமர மக்களுக்கு புரியும் வகையில் உபதேசித்தவர். சனாதன தர்ம எழுச்சிக்கு பாடுபட்டவர்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஆசார்ய ஸ்வாமிகள் மீது மிகுந்த அபிமானம் உள்ளவர்.
அவர்களின் மறைவு இந்து சமுதாயத்திற்கு பேரிழப்பு. ஸ்வாமிகளின் அருட்கமல மலரடிகளில் இந்துசமயமன்றம் மலரஞ்சலிகளை பக்தியுடன் சமர்ப்பிக்கிறது.
அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள்,
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு.

பேராயிரம் பரவி ப்ரார்த்தனை செய்யுங்கள்

இந்துசமயமன்றம் அன்பர்களே,
வணக்கம்.
வைத்தீஸ்வரன் கோவில் (புள்ளிருக்குவேளூர்) கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி எல்லோரும் நாளை (29/Apr/2021) தேவாரப்பதிகங்களில் “பேராயிரம் பரவி” என்கிற பதிகத்தை ஓதி மனமார தையல்நாயகி சமேத ஸ்ரீவைத்தீஸ்வரப்பெருமானை ப்ரார்த்தனை செய்யுங்கள். உலகத்தை ஆட்டிப்படைக்கும் தீராத நோய்த்தொற்றை அழித்தொழிக்க சிவபெருமானை அவனருளாலே அவன் தாள்வணங்கி வேண்டுங்கள். நல்லதே நடக்கட்டும் நமசிவாயம் அருளட்டும்!

புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான
இந்துசமயமன்றம்.

“பேராயிரம் பரவி”

திருச்சிற்றம்பலம்

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவுஇலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்து அருளவல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீ எழத் திண்சிலை கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!
(நோய் தீர்க்கும் அப்பர் தேவாரம்)


பொருள் : தேவர்களால் ஆயிரக்கணக்கான பெயர்களால் புகழப்படும் சிவனே! உன்னை மறக்காத பக்தர்களுக்கு கிடைப்பதற்கரிய பிறப்பற்ற நிலை அருள்பவனே! நோய் தீர்க்கும் மந்திரமாகவும், தந்திரமாகவும், மருந்தாகவும் விளங்குபவனே! தீராத நோய் தீர்த்தருளும் வல்லவனே! அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரிக்க வில் ஏந்தியவனே. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் வைத்தீஸ்வரன் கோவிலில் வீற்றிருக்கும் வைத்திய நாதனே! உன்னை
இத்தனை நாளும் நினைக்காமல் வீணாக பொழுதைக் கழித்து விட்டேனே!

ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் மூன்றாவது ஆராதனை

ஸ்ரீகுருப்யோ நம!
இந்துசமயமன்றம் சார்பில் டிபன்ஸ் காலனி அருள்மிகு வரசித்தி வினாயகர் திருக்கோவில் திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் மூன்றாவது ஆராதனை சமயத்தில் 26.03.2021 வெள்ளிக்கிழமையன்று உலகநன்மைக்காக கூட்டுப்ரார்த்தனை, குரு வணக்க வழிபாடு சிறப்பாக நடத்தினார்கள். அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் அவர்கள் ஸ்ரீபுதுப்பெரியவரின் மகிமைகளை எடுத்துக்கூறினார்கள்.கிளை அமைப்பாளர் திருமதி. தாரா தேவராஜ் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார்கள்.

வந்தே ஸ்ரீஜயேந்த்ர ஜகத்குரும்!

சனாதன தர்மத்தை வாழவைக்க வாராது வந்த மாமணியாம் நமது ஜகத்குரு!
அயோத்தி ராமபிரான் ஆலய புனர்நிர்மாணப்பணியில் ஸ்ரீஸ்வாமிகளின் கைங்கர்யம் அதிகம்!
மஹாஸ்வாமிகள் ஆசியுடன் இந்துசமயமன்றத்தை போஷித்து வளர்த்த பெருந்தகை!
பட்டிதொட்டியெலாம் சென்று தனது இன்முகம் காட்டி அனைவருக்கும் ஆசி வழங்கிய வள்ளல்!
ஆதிசங்கரருக்குப்பிறகு பாரத தேசமெங்கும் பவனிவந்து ஹிந்து தர்மத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டிய ஜகத்குரு!
எண்ணிலடங்கா திருப்பணிகள்! வேதபாடசாலைகள், கல்விச்சாலைகள், பல்கலைக்கழகம், மருத்துவமனைகள், ஏழை எளியோருக்காய் உதவிய உத்தம ஞானி!
ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகளின் மூன்றாவது ஆராதனை தினத்தில் (26.03.2021) இந்துசமயமன்றம் தனது ஹ்ருதயபூர்வ அனந்தகோடி நமஸ்காரங்களை பக்தியுடன் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்வாமிகளின் அருட்கமலமலரடிகளில் சமர்ப்பிக்கிறது.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமன்.
அமைப்பாளர்கள்
மற்றும்
இந்துசமயமன்ற அன்பர்கள்

அன்னாரின் திருப் பாத கமலங்களில் சமர்ப்பணம்

அத்வைத ஞான மூர்த்தி ஆனந்த மோன மூர்த்தி இச் சகம் வாழ வாழும்
ஈடிலா எம் குரு மூர்த்தி
உத்திராடம் உதித்த மூர்த்தி

ஊழ்வினை அகற்றும் மூர்த்தி

எத்தகு பிழை செய்தாலும் ஏழையேமை ஏற்கும் மூர்த்தி
ஒப்பிலா உண்மை அன்பு
ஓங்கிட அருளும் மூர்த்தி
ஒள டதம் போலும் நின்று
அகிலத்தைக் காக்கும் மூர்த்தி
இஃது எம் தோத்திரப் பா
ஏற்றெமை ஆண்டருள்க!
பூஜ்ய ஶ்ரீ சுவாமிகளின் 53வது ஜெயந்தி நன்னாளில் அன்னாரின் திருப் பாத கமலங்களில் சமர்ப்பணம்.
வ.ச. ஶ்ரீகாந்த் – இந்து சமய மன்றம்

கோபூஜை தண்டலம் 05.03.2021

இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் ஜயந்தி விழா – கோபூஜை
தண்டலம் (ஸ்ரீபாலப்பெரியவர் அவதார ஸ்தலம்)
05.03.2021 வெள்ளிக்கிழமை திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் ஸ்ரீபாலப்பெரியவர் அவதார ஸ்தலத்தில் கோபூஜை மிகவும் விமரிசையாக நடைபெற்றது. ஊர்மக்கள் அவரவர் வீட்டு பசுமாடு கன்றுக்குட்டியுடன் அழைத்துவந்தனர். இருபத்தோரு பசுமாடுகளுக்கு தண்டலம் வேதபாடசாலை வளாகத்தில் பூஜை வேதவிற்பன்னர்களால் நடத்தி வைக்கப்பெற்றது. ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜி பசுக்களின் மஹிமைகள் பற்றிய விளக்கினார். ஸ்ரீ.ஸ்ரீதர்ஜி அவர்கள் ஆலோசனைகளுடனும், கிராமப்பொதுமக்களின் மிகச்சிறப்பான ஒத்துழைப்புடனும் ஸ்ரீபெரியவா அனுக்ரஹத்துடனும் கோபூஜைை விசேஷமாக நடந்தேறியது.இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர்கள் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமன், ஸ்ரீ.வெங்கட்ராமன் (ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா)ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.