சிவாய நம! திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியில் இந்துசமயமன்றம் கிளை துவக்கப்பட்டது. அங்கே கடந்த மார்கழி முதல்நாள் ஸ்ரீகாஞ்சிப்பெரியவர் காண்பித்தருளிய வழியில் பர்வதமலை கிரிவலம் வரும் அன்பர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாத வினியோகம் நடைபெற்றது.
Category: News
ஸ்ரீபர்வதமலை கிரிப்ரதக்ஷிணம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் செங்கம் சாலையில் உள்ள புராதன மலை ஸ்ரீபர்வதமலை. அந்த மலை தக்ஷிணமேரு என்றும் தக்ஷிண கைலாயம் என்றும் வழங்கப்படுகிறது. சித்தர்களின் வாசஸ்தலமான இந்த மலையில் ஸ்ரீபிரமராம்பிகை உடனுறை ஸ்ரீமல்லிகார்ஜுன ஸ்வாமி வீற்றிருக்கிறார். எளிதாக ஏறமுடியாத இம்மலை செங்குத்தாக, கம்பிகள் மற்றும் கடப்பாரைகளை பிடித்து ஏற முடிகிற அமைப்பில் உள்ளது. இம்மலையினை ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் சிவஸ்வரூபமாக பாவித்து மார்கழி மாதம் முதல்நாள் கிரிப்ரதக்ஷிணம் செய்தார். மலைவலம் வருவதற்கு சரியான பாதை இல்லாத நிலையில் சுற்றுப்புற கிராமங்களின் களத்துமேடு, வயல்வெளி என பலவிதமாக பயணித்து ஸ்ரீமஹாபெரியவர் கிரிவலம் செய்தார்கள். சுமாராக 21 கிமீ க்கு மேல் சுற்றளவுள்ள இம்மலையினை ஸ்ரீபெரியவரின் பாதையில் இன்றளவும் மார்கழி முதல்நாள் பக்தர்கள் வலம்வருகிறார்கள். ஸ்ரீகாஞ்சி காமகோடி சங்கரமடத்தின் ஸ்ரீசங்கராச்சார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் போளூர் சங்கர வேதபாடசாலை மற்றும் திருவண்ணாமலை ஸ்ரீசங்கர மடம் இந்த புனிதமான பணியை மேற்கொண்டுவருகிறார்கள். இந்துசமயமன்றம் அன்பர்கள் வருகிற மார்கழி முதல்நாள் இதில் திரளாக பங்குகொண்டு சிவனார் அருள்பெறவும், ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் குருவருளையும் பெற ப்ரார்த்திக்கிறோம்.
இந்துசமய மன்றம் சார்பில் தீபாவளி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி
இன்று (05.11.18) திங்கட்கிழமை ஸ்ரீபெரும்புதூர் வட்டம் படப்பை அருகிலுள்ள ஒரத்தூர் கிராமத்தில் பழங்குடியின இருளர் மக்கள் வசிக்கும் பகுதியில் நமது இந்துசமய மன்றம் சார்பில் தீபாவளி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாணையின்வண்ணம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பழங்குடியின மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்ய தீர்மானித்து முதற்கட்டமாக தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம், பிஸ்கட் வழங்கி அவர்களுடன் உரையாடி கொண்டாடினோம். இதற்கு ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹம் பரிபூரணமாக இருந்தது. ஒரத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் திரு. கற்பகம் சுந்தர் அவர்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்கியும் மதங்கள் அன்பை போதிக்கின்றன. அந்த வகையில் நமது சமயமன்றம் இதுபோன்ற நற்காரியங்களை செய்து வருவதை வரவேற்பதாகவும் வரும் காலங்களில் தங்கள் பகுதியில் செய்ய உத்தேசித்துள்ள மருத்துவ முகாமிற்கு ஒத்துழைப்பு நல்குவதாகவும் கூறினார்கள். ஊராட்சி மன்ற செயலர் திரு.பார்த்தசாரதி அவர்கள் நமக்கு வேண்டிய உதவிகளை செய்துதந்தார்கள். நமது சமயமன்ற மாநில அமைப்பாளர் ஸ்ரீமதி. கௌரிவெங்கட்ராமன், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு.ஸ்ரீராம், சமயமன்ற திருக்கோவில் எண்ணெய் வழங்கும் திட்ட பொறுப்பாளர் திரு.இராமச்சந்திரன், சமயமன்ற புரவலர்.திரு. சந்திரநாத் மிஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டு இனிப்பு வழங்கினார்கள். அழகான கிராமத்தில் அன்பான கிராமத்து மக்களுடன் ஆனந்தமாக தீபாவளி ஆசார்யாள் ஆசியுடன் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீதாமிரபரணி புஷ்கரம் விழிப்புணர்வு ரதயாத்திரை
சிவாய நம! இன்று (09.10.18) அன்று காலை வண்டலூரில் ஸ்ரீவழித்துணை பாபா ஆலயத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீதாமிரபரணி புஷ்கரம் விழிப்புணர்வு ரதயாத்திரையை வரவேற்றோம். வழித்துணை பாபா கோவிலை சிறப்புற நடத்தி வரும் ஸ்ரீசாய் ராமலிங்கம் ஐயா அவர்கள் ரதயாத்திரையை வரவேற்க மிகச்சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தார். இந்துசமயமன்றம் சார்பில் அடியேன்(புலவர் ஆத்ரேய சுந்தரராமன்) தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் ஸ்ரீராம் மற்றும் சாயிசேனா அமைப்பு சார்பில், ரதத்தில் உலாவரும் ஸ்ரீதாமிரபரணி தேவிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஸ்ரீஜெயமாருதிதாச ஸ்வாமிகள் ரதத்தில் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருளாசி, ப்ரசாத விநியோகம் செய்துவந்தார். வி எச் பி நிர்வாகிகள் ஸ்ரீமுருகானந்தம்ஜி மற்றும் ஸ்ரீராம், தாம்பரம் கணேஷ் மற்றும் பலர் ரதத்துடன் வந்தனர். அனைவருக்கும் ஸ்ரீசாய் ராமலிங்கம் ஐயா சுவையான சாய் அன்னப்ரசாதம் அளித்தார். தமிழக காவல்துறை மிகச்சிறப்பாக பாதுகாப்பு அளித்தார்கள். ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹத்துடன் ரதயாத்திரை வரவேற்பு நிகழ்ச்சி நன்றாக நடந்தேறியது.
ஸ்ரீருத்ராக்ஷ லிங்கேஸ்வரருக்கு நடைபெற்ற சிவநாம ஜப வேள்வி
சிவாய நம! . 5.10.18 வெள்ளியன்று நேற்று புதுப்பெருங்களத்தூர் ஸ்ரீலக்ஷ்மி விநாயகர் திருக்கோவிலில் ஸ்ரீருத்ராக்ஷ லிங்கேஸ்வரருக்கு நடைபெற்ற சிவநாம ஜப வேள்வி கூட்டுப்ரார்த்தனை. இந்துசமயமன்றம் மற்றும் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் ஸ்ரீராம் அவர்கள் கலந்துகொண்டு நடத்தி வைத்தார்.
ஸ்ரீராமானுஜர் ஆயிரத்திரண்டாவது ஆண்டு விழா
சிவாய நம! சேலையூர் சத்சங்கம் சார்பில் தாம்பரம் செங்கல்பட்டு வழியில் காட்டாங்குளத்தூர் சிவானந்த சரஸ்வதி சேவாஸ்ரமத்தில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி ஸ்ரீராமானுஜர் ஆயிரத்திரண்டாவது ஆண்டு விழா நேற்று மாலையில் இருந்து (5.10.18 மற்றும் 6.10.18)நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஸ்ரீமன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் ஸ்வாமிகள் விஜயம் செய்து அருளாசி வழங்கினார். ஸ்ரீசுதர்சன ஹோமம் மற்றும் 108 மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் நமது இந்துசமயமன்ற மஹாலக்ஷ்மி நகர் கிளை திருமதி.வாசுகி பன்னீர்செல்வம், டிபன்ஸ்காலனி கிளை திருமதி. தாரா தேவராஜ், ஊரப்பாக்கம் கிளை திருமதி. பார்வதி மோகன் ஆகியோர் தங்கள் கிளை உறுப்பினர்களுடன் வந்திருந்து பங்கேற்றனர். ராணிப்பேட்டை ஸ்ரீவித்யா பீடம் ஸ்ரீபாரதிமுரளீதர ஸ்வாமிகள் ஆசி வழங்கினார். ஸ்ரீயோகசந்தோஷபீடம் ஸ்ரீமாருதிதாச ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீமதி.அபிராமி அம்மா அவர்கள் வாழ்த்தினார்கள். பண்டிட் ஸ்ரீ.காழியூர் நாராயணன் மற்றும் அடியேன் வாழ்த்துரை வழங்க சத்சங்கம் நிர்வாகி.ஸ்ரீஸ்ரீனிவாச ஆழ்வார்ஜி சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தார். சேவாஸ்ரம நிர்வாகி ஸ்ரீமதி.லக்ஷ்மி ராஜாராம் அவர்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.
ருத்ராக்ஷ லிங்கத்திற்கு விசேஷ பூஜை சிவநாம ஜப வேள்வி நடைபெற உள்ளது
சிவாய நம! சிவபூஜை செய்வது மிகவும் புண்ணியம். சிவநாமத்தை சொல்வது பெரிய தவம். அதனால்தான் மணிவாசகஸ்வாமிகள்”யானேயோ தவம் செய்தேன் சிவாயநமவெனப்பெற்றேன்” என்கிறார். ஒரு ஜீவனின் ரத்தினமாக பிரகாசிப்பது சிவநாமமே என்கிறார் அப்பைய தீட்சிதர். தென்னாடுடைய பெருமான் எந்நாட்டவர்க்கும் இறையாம் பரம்பொருளை சிவநாமத்தைச்சொல்லி சிவபூஜை செய்வது புனிதமான சிவ கைங்கர்யம். வில்வ இலைகளால் லிங்கமூர்த்தியை அர்ச்சித்தல் விசேஷம். சிவபெருமானின் அருவுருவ மூர்த்தமான லிங்க மூர்த்தி சுயம்புவாகவும், கல்லாலும், மண், மரம், நவரத்தின, பாண, ஸ்படிக, ருத்ராக்ஷ என பலவிதங்களில் பூஜை செய்யப்படுகிறார். ருத்ராக்ஷம் சிவபெருமானின் நெற்றிக்கண் சம்பந்தப்பட்டதால் அதற்கு பவித்ரம் அதிகம். முழுவதும் ருத்ராக்ஷங்களால் செய்யப்பட்ட லிங்கமூர்த்தியை வில்வம் மற்றும் புஷ்பங்கள் கொண்டு புனிதமான சிவக்ஷேத்ரத்தில் பூஜித்தல் நமக்கு பலமடங்கு புண்ணியத்தை தரும்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான, அழகிய கிராமத்தில் இயற்கை சூழல் கெடாத அற்புதமான பூஜைக்கேற்ற சூழலில் அம்பாள் மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீசந்திரமௌளீச்வரஸ்வாமி திருக்கோவில் திண்டிவனம் அருகில் கீழ்பசார் எனும் கிராமத்தில் மிக அதிக தெய்வ சாந்நித்யத்துடன் விளங்குகிறது. அக்கோவிலில் வரும் நிறைமதி நாளன்று (பௌர்ணமி 24.09.18 திங்கட்கிழமை ) அன்று மாலை ஆறுமணியளவில் ருத்ராக்ஷ லிங்கத்திற்கு விசேஷ பூஜை சிவநாம ஜப வேள்வி நடைபெற உள்ளது. திங்கள் சந்திரனுக்கானது. அத்தலத்தில் உறையும் ஸ்வாமி சந்த்ரமௌளீச்வரர். (சந்த்ரனை தலையில் சூடிய பெருமான் ). சந்த்ரன் குளிர்ச்சியை தருபவர். அங்குள்ள அன்னையின் திருநாமம் மரகதாம்பிகை . மரகதம் என்றால் பச்சை- பசுமை. இதுவும் குளிர்ச்சி மற்றும் சந்தோஷம், செல்வ வளம். இன்னொரு விசேஷம் இக்கோவில் சுக்ர பரிகார ஸ்தலம். செல்வம் தரும் பெருமானை பௌர்ணமி நாளில் பொன்மாலை வேளையில் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் ஆசியுடன் வலம்வரும் ஸ்ரீருத்ராக்ஷ சிவமூர்த்திக்கு பூஜையுடன் சிவநாம ஜப வேள்வி கூட்டுப்ரார்த்தனை சிறப்பாக நடைபெற உள்ளது. ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றம் மற்றும் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பெறும் இந்த வேள்வி உலக நலனை முன்னிட்டும், இத்திருக்கோவில் திருப்பணிகள் விரைவில் பூர்த்தியாகி திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப்பெருவிழா விரைவில் நடைபெறவுமான நோக்கத்திலானது. ஏற்கனவே கடந்த மாதம் இதே அமைப்புகள் சார்பில் ஊர்பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 54 கோபூஜை மிகச்சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சிவநாம ஜபவேள்விக்கு கீழ்பசார் ஊர்பொதுமக்கள் சார்பிலும், இந்துசமயமன்றம் மற்றும் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பிலும் வருக வருக என இருகரம் கூப்பி அழைக்கிறோம்.
சிவநாமத்தை ஓதி சிவபூஜை செய்திடுவோம்! வாழ்வில் அனைத்து நலன்களும் பெற்றிடுவோம்!
மேலும் விவரங்களுக்கு : திரு. வெங்கடபதி-9962513308, புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன் – 9789007401, திரு. ஸ்ரீராம் – 7305055553, ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன்-9080588620.
சிவநாம ஜப வேள்வி வருகிற 23.09.18 ஞாயிறு அன்று மாலை 4 மணியளவில்
சிவாய நம! இந்துசமயமன்றம் மற்றும் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் சிவநாம ஜப வேள்வி வருகிற 23.09.18 ஞாயிறு அன்று மாலை 4 மணியளவில் திரு.ஸ்ரீராம் அவர்கள் இல்லத்தில் ( 32. தாமரை அபார்ட்மென்ட், இரண்டாவது தெரு, கேப்டன் சசிகுமார் நகர், பெருங்களத்தூர், சென்னை -63)
ஸ்ரீபரமேச்வர க்ருபையுடன், ஸ்ரீகாஞ்சி ஆசார்யாள் அனுக்ரஹத்துடன் நடைபெற உள்ளது. ஓம்காரத்துடன் சிவபுராணம் பாராயணம், சிவநாம ஜபம், ருத்ராக்ஷ சிவனாருக்கு விசேஷ பூஜை நடைபெறும். “யச்சிவோ நாம ரூபாப்யாம் யா தேவீ சர்வமங்களா” என்கிற வாக்யத்திற்கேற்ப சிவநாம ஜபம் செய்து சர்வமங்களத்தையும் அனைவரும் அடைய வேண்டி, திரு அருணாச்சல சிவனாரிடமும், ஸ்ரீஆசார்யாளிடம் ப்ரார்த்தித்து ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் அதிஷ்டானத்தில் வைத்து கொணரப்பெற்ற ஸ்ரீருத்ராக்ஷ லிங்கத்திற்கு, உலகநலனை வேண்டி செய்யப்பட உள்ள இப்புனித சிவபூஜையில் அனைவரும் பங்கேற்கலாம். அவரவர் பகுதிகளில் இல்லங்களிலோ அல்லது ஆலயங்களிலோ இந்த சிவலிங்கத்தை கொண்டுவந்து வைத்து பூஜிக்கலாம். சாதி வேறுபாடின்றி அனைவரும் பூஜிக்கலாம். ருத்ராக்ஷ சிவலிங்கம் மிகவும் பவித்ரமானது. ஹ்ருதய சுத்தியுடன் சுத்தமான இடத்தில் எவரும் பூஜிக்கலாம். பூஜையில் பங்கு கொள்ள அல்லது தங்கள் பகுதிகளில் செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட கைபேசி எண்களில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். 9789007401/
7299272442 / 9080588620.
“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் “
சாதுர்மாஸ்ய வ்ரதம் அனுஷ்டித்து வரும் ஸ்ரீபிலாஸ்பூர் ஸ்வாமிகள் திருமுன்னர் நமது இந்துசமயமன்றம்
இன்று (18.09.18) செவ்வாய்க்கிழமை ஆதம்பாக்கத்தில் சாதுர்மாஸ்ய வ்ரதம் அனுஷ்டித்து வரும் ஸ்ரீபிலாஸ்பூர் ஸ்வாமிகள் திருமுன்னர் நமது இந்துசமயமன்றம் சார்பில் ஒரு சத்சங்கம் நிகழ்ச்சி ஸ்ரீமஹாஸ்வாமிகள் அனுக்ரஹத்துடன் நடைபெற்றது. ஸ்ரீமதி.சாந்தாபாலசுப்ரமணியன் குழுவினர் பஜனைப்பாடல்கள் பாடினர். ஸ்ரீமதி.பார்வதிமோகன் அவர்கள் இறைவணக்கம் பாட ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஸ்ரீகாந்த்ஜி பாரதமாதா பூஜை ப்ரார்த்தனை செய்தார். தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஸ்ரீராம் அவர்கள் ஸ்வாமிகளுக்கு இந்து அமைப்புகள் சார்பில் மரியாதை செய்தார். புலவர் இராமச்சந்திரன் அவர்கள் ஸ்வாமிகளுக்கு வரவேற்பு பத்திரம் வாசித்தளித்தார். ஸ்ரீபிலாஸ்பூர் ஸ்வாமிகள் அனுக்ரஹபாஷணம் (அருளாசியுரை) நிகழ்த்தினார்கள்.அதில் நம்முடைய சனாதன தர்மத்தை கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும் ஹிந்து சம்பிரதாயங்களின் மேன்மையையும் சிறப்பாக வலியுறுத்தினார்கள். இரவு உணவுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
வெள்ளி கவசம் சாற்றும் நிகழ்ச்சி
டிபன்ஸ்காலனியில் ஸ்ரீவரசித்தி வினாயகர் கோவிலில் இன்று நடைபெற்ற வெள்ளி கவசம் சாற்றும் நிகழ்ச்சியில் அடியேன். ஹோமத்தில் ஸ்ரீவினாயகர் திருக்குடை மற்றும் மூஷிகத்தில் எழுந்தருளிய திருக்காட்சி. மஹாவரப்ரசாதியான இந்த வினாயகர் திருக்கோவிலில் ஸ்ரீபர்வதவர்தனி உடனுறை ஸ்ரீராமநாதேஸ்வரர் திருச்சந்நியியில் திருவாசகம் முற்றோதுதல் கடந்த நான்கு வருடங்களுக்கு மேல் சிவனருளால் சிறப்பாக நமது இந்துசமய மன்றம் மற்றும் ஸ்ரீநந்தி சித்தர் பீடம் திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் சார்பில் நடைபெற்று வருகிறது.