இந்துசமயமன்றம் சார்பில் வேண்டுகோள்

ஸ்ரீகுருப்யோ நம!

வணக்கம். மிகக்கொடூரமான கொரோனா வைரஸின் கோரதாண்டவம் உலகம் முழுவதும் இருக்கிறது. இதிலிருந்து உலகம் மீண்டுவர தெய்வத்தை வேண்டுவோம். காஞ்சியின் கருணைத்தெய்வம் ஸ்ரீமஹாபெரியவரை மனதார ப்ரார்த்திப்போம்.
மத்திய மாநில அரசுகளின் உத்தரவை மதித்து நடப்போம்.
சமூக விலகலையும் சுகாதாரத்தையும் முன்னெடுப்போம்.
நாம் வாழும் இப்பூவுலகில் நம்மைச்சுற்றி வாழ்பவர்கள் நலனைப்பேண நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம்.
ஏழைகளுக்கு ஏதாவதொரு வகையில் அத்தியாவசிய பொருட்கள் முடிந்ததை வாங்கிக்கொடுப்போம்.
தெருவில் சுற்றும் மாடுகளுக்கு வாயிலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதன் தாகம் தீர்க்க முயற்சிப்போம். காய்கறிகள் பழங்கள் இவற்றின் தோல் அது சாப்பிடக்கூடிய உணவுப்பொருட்களை கொடுப்போம்.
தெருவில் பசியோடு அலையும் நாய்களுக்கு முடிந்தது எஞ்சிய உணவையாவது தருவோம்.
காக்கைக்கு தினமும் சாதம் வைப்போம்.
பறவைகளுக்கு ஒரு கிண்ணத்தில் நீர் வைப்போம்.நெல்மணிகள் அல்லது ஏதாவது தானியங்களை போட்டுவைப்போம்.
நாம் செய்யும் இச்சிறு உதவிகள் அந்த ஜீவன்களுக்கு பசியாற உதவும்.
இது மிகப்பெரிய தர்மம்.
தர்மம் தலை காக்கும் என்பது வேதவாக்கு.
நிச்சயம் அனைவரும் காக்கப்படுவோம்.
அதிகமாக நிதி இருந்தால்தான் உதவி செய்யவேண்டுமென்பதில்லை. மனமிருந்தாலே போதும்.
இந்துசமயமன்றம் மனித மனங்களின் ஒருமித்த ஈடுபாட்டில் செயல்படும் அமைப்பாகவே ஸ்ரீமஹாபெரியவர் உருவாக்கினார்கள். நம் காஞ்சி ஸ்ரீமடத்தின் ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன்
நாமும் இதை பின்பற்றுவோம். நம் தலைமுறையை காப்போம்.
ஸ்ரீமஹாபெரியவர் திருவடிகள் போற்றி! போற்றி !

“ஸ்ரீராமநவமி”

ஸ்ரீகுருப்யோ நம!

“ராமோ விக்ரஹவான் தர்ம”
தர்மங்களின் திருவுருவாகத்திகழ்ந்தவன் ஸ்ரீராமன்.
“ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசராத்மஜம்”
ஒப்புயர்வில்லா பரம்பொருள் தசரத மஹாராஜாவின் திருக்குமரனாக, மன்னு கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனாய் அவதரித்து சகல மனித தர்மங்களையும் அனுஷ்டித்து நமக்காக அருளினான் என்பது மகரிஷி வாக்கு.
ஒரு வில், ஒரு சொல், ஒரு இல்(மனைவி) என வாழ்ந்து காட்டிய அவதாரபுருஷன் ஸ்ரீராமன்.
வேய்புனர்பூசமும் விளங்கு கற்கடகமும் அவன் தோன்றியதால் பெருமை பெற்றது.
கல்லிலே கால்வண்ணம் (அகலிகை சாப விமோசனம்), போரிலே வில் வண்ணம் (அசுர வதம்) என அவனால் பூமி புனிதமடைந்தது.
படகோட்டி குகனும், வானர சுக்ரீவனும், அசுர விபீஷணனும் தன் சகோதரர்களாய் ஏற்றான். வாயுகுமாரனை தான் பெற்ற பிள்ளையாய் அன்புசெலுத்தினான். சத்தியத்தையும் தர்மத்தையும் அவை வெல்லும் திறத்தையும் காட்டுகிறது ஸ்ரீராமசரிதம்.அவன் அவதரித்த நன்னாளில் நாம் அவன் திருநாமத்தை பலமுறை உச்சரித்து வணங்குவோம். கலியுகத்தில் ராமநாமமே அருமருந்து என பல மஹான்கள் அருளியுள்ளனர்.
இன்றைய உலகம் கொரோனா என்னும் விஷக்கிருமியால் மிகுந்த துயரத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நேரத்தில் நாமனைவரும் ஸ்ரீராமநாமத்தை இயன்றவரை ஜபம் பண்ணுவோம்.ஸ்ரீராமன் சீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமத் சமேதனாய் வில்லேந்திய தேவனாய் வந்து நமக்கு அருள்புரியட்டும்.
அனைவருக்கும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீராமநவமித்திருநாள் வாழ்த்துக்கள்!
ஜெய் ஸ்ரீராம்!

இனிய யுகாதி நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீகுருப்யோ நம!
அனைத்து அன்பர்களுக்கும் இனிய யுகாதி நல்வாழ்த்துக்கள்!
இப்புத்தம்புதிய புத்தாண்டு நமக்கு நோயில்லா வாழ்வினை கொண்டுவரட்டும்.நலமுடன் வளமுடன் அனைவரும் வாழ ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் கமலமலரடிகளை ப்ரார்த்திக்கிறோம்.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
மாநில அமைப்பாளர்கள்
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு.

இந்துசமயமன்றம் சார்பில் உலகநலன் வேண்டி அவரவர் இல்லங்களில் ப்ரார்த்தனை நாள்: 22.03.2020 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 8 மணிமுதல் 8.30 மணிவரை

அன்புடையீர்!
எல்லாம்வல்ல இறைபரம்பொருளின் அருளாலும் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் குருவருளாலும் அனைவருக்கும் நலமே விளைக! வருகின்ற 22.03.2020 ஞாயிற்றுக்கிழமை நாள்முழுவதும் கொரோனா தடுப்பு முயற்சியாக சுயகட்டுப்பாட்டுடன் அனைவரும் அவரவர் இல்லங்களில் இருக்க நமது பாரதப்பிரதமர் ஸ்ரீ.மோதிஜி அவர்கள் அறிவித்துள்ளார்கள். புனிதமான நமது பாரதபூமியில் கொடிய நோய்கள் அண்டாமல் இருக்கவும் நமது மக்களின் நலனில் அக்கறையோடு மத்திய மாநில அரசுகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு முழுமையாக நாம் ஒத்துழைப்பு தரவேண்டியது நமது தார்மீகக்கடமையாகும்.அன்றைய நாளில் காலை எட்டு மணியிலிருந்து எட்டரை மணிவரை அவரவர் இல்லங்களிலேயே குளித்து பூஜையறையில் அல்லது சுத்தமான இடத்தில் அமர்ந்து இஷ்ட தெய்வங்களை, ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரை மற்றும் நம் பாரதத்தின் புனித மஹான்களை மனதால் வணங்கி, ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், ஹனுமான் சாலீசா பாராயணம் செய்ய வேண்டுகிறோம். இந்த ஸ்லோகங்கள் சொல்லி பழக்கமில்லாதவர்கள் புனிதமான சிவ நாமத்தையோ அல்லது ராம நாமத்தையோ ஜபம் செய்யவும் ஸ்ரீகந்தர் சஷ்டிக்கவசம், தேவாரத்தில் நோய் தீர்க்கும் பதிகங்கள், கோளறு பதிகம் பாராயணம் செய்ய வேண்டுகிறோம். ஒரே நேரத்தில் காலை எட்டு மணியிலிருந்து எட்டரை மணிவரை உலக நலன் வேண்டி இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா அன்பர்கள் மற்றும் தெய்வீகப்பற்றுடைய அன்பர்கள் அனைவரும் ஒருசேர ப்ரார்த்தித்து கொடிய நோய் சவாலை எதிர்கொண்டு முறியடிப்போம்.
பல ஆயிரம் மைல்தாண்டி வேறுநாடுகளில் வாழ்ந்துவரும் நம் நண்பர்கள், உறவினர்கள், சகோதர சகோதரிகள் நலமாக வாழ ப்ரார்த்திப்போம்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் நலன் சார்ந்த பணிகளில் தங்களை ஈடுபடுத்தி அயராது உழைக்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள்,சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர்,மக்கள் நலப்பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள், அரசு ஊழியர்கள், அரசுப்பிரதிநிதிகள் அனைவரின் நலமான வாழ்விற்கும் ப்ரார்த்தனை செய்வோம்.ஸ்ரீகாஞ்சி யின் கருணைத்தெய்வம் மஹாஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் அனுக்ரஹம் அனைவருக்கும் கிடைக்க இந்துசமயமன்றம் ஹ்ருதயபூர்வமாக ப்ரார்த்தனை செய்கிறது.
“வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் “
அன்புடன்,
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்,
கௌரி வெங்கட்ராமன்.
மாநில அமைப்பாளர்கள்,
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான
இந்துசமயமன்றம்.

இந்துசமயமன்றம் சார்பில் உலகநலன் வேண்டி ப்ரார்த்தனை.

உலகம் முழுவதும் கொரானா வைரசின் கொடூர தாக்குதலில் நிலைகுலைந்து போயுள்ளது.நமது பாரத தேசத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வைரசின் தொற்று உள்ளதாக அறிக்கைகள் பகர்கிறது. இதிலிருந்து தப்பிக்க மற்றும் இந்த வைரசின் தொற்றை தவிர்க்க பல முன்யோசனைகளை மத்திய மற்றும் மாநில அரசாங்கம் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவற்றை கட்டாயம் அனைவரும்பின்பற்ற வேண்டுகிறேன்.
நமது காஞ்சி மாமுனிவர் நமக்கு பல உபாயங்களை பல நேரங்களில் நோயுடன் வந்தவர்களுக்கு உபதேசம் மூலமாக அருளியுள்ளார்கள். அதில் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், ஸ்ரீநாராயணீய பாராயணம், ஸ்ரீகாயத்ரி ஜபம், சிவ மற்றும் ராம நாம ஜபம் ஆகியவை. இது தவிர வைத்யநாதாஷ்டகம், ஸ்ரீகந்தர் சஷ்டிக்கவசம், தேவாரத்தில் பலன் தரும் பாராயணப்பதிகங்கள் ஓதுதல் ஆகியவை. இவற்றில் நம்மால் முடிந்ததை இயன்றவரை ஓதி நமக்காகவும் உலக நலனிற்காகவும் இறைவனிடமும் நமது ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளின் பொற்பதங்களிலும் வேண்டுவோம். தினமும் இதற்காக ஒரு சிறிது நேரம் ஒதுக்கி கட்டாயம் ப்ரார்த்தனை செய்ய வேண்டுகிறேன். கூட்டுப்ரார்த்தனை என்பது ஒரே இடத்தில் கூடி வேண்டுவது மட்டுமல்ல ஒரே நோக்கத்திற்காக அந்தந்த இடங்களில் இருந்தபடியே வேண்டவும் முழுப்பலன் கிடைக்கும். சமயமன்ற அன்பர்கள் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா அன்பர்கள் இந்த உத்தமமான ப்ரார்த்தனையில் பங்குபெற அடியேன் சார்பிலும் குழு அட்மின்கள் சார்பிலும் வேண்டுகிறேன்.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்.
அமைப்பாளர்கள்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான
இந்துசமயமன்றம்.

இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அவதரித்த தண்டலம் கிராமத்தில் திருவிளக்கு பூஜை.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகில் அமைந்துள்ள அழகிய சிறிய கிராமம் தண்டலம். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் எழுபதாவது ஐகத்குருவாய் எழுந்தருளி நமக்கெல்லாம் அருள்பாலிக்கும் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவதரித்த தலம் தண்டலமாகும். ஸ்ரீஸ்வாமிகளுடைய 52 வது ஜயந்தித்திருநாளைஅங்கே கொண்டாட நமது இந்துசமயமன்றம் தீர்மானித்து திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கிராமப்பெரியோர்கள், ஸ்ரீமடத்து பக்தர்கள் ஒத்துழைப்பு நல்க 8.3.2020 ஞாயிறு அன்று மாலை இந்த வைபவம் ஸ்ரீஸ்வாமிகள் அருளாசியுடன் மிகச்சிறப்பாக நடந்தேறியது. மாசிமகமும் இணைந்த நன்னாள் அது.தண்டலம் கிராம தேவதை ஸ்ரீபொன்னியம்மன் ஸ்ரீசெல்லியம்மன் திருக்கோவிலிருந்து மாலை நான்கு மணிக்கு நாதஸ்வர மேளத்துடன் ஹரஹர சங்கர, ஜயஜய சங்கர கோஷத்துடன் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் விக்கிரகம், ஸ்ரீருத்ராக்ஷ லிங்கேஸ்வரர், ஸ்ரீகுருபாதுகைகளுடன் மக்கள் திரளாக தொடர ஊர்வலம் புறப்பட்டு கிராமத்தெருக்கள் வழியாக ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் சமேத ஸ்ரீதரணீச்வர ஸ்வாமி திருக்கோவிலை வந்தடைந்தது. கிராம கவுன்சிலர் திருமதி வித்யாலக்ஷ்மிகிரி அவர்களும் இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் திருமதி கௌரி வெங்கட்ராமன் மற்றும் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் திருமதி.அக்ஷயா ஸ்ரீராம் அவர்களும் திருவிளக்கேற்றி பூஜையை துவக்கிவைத்தனர். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயப்ரச்சாரகர் ஸ்ரீ.குமாரஸ்வாமிஜி திருவிளக்கு பூஜை நடத்தி வைத்தார். மகளிர் தினமானதால் அனைவருக்கும் ஸ்ரீகாமாக்ஷி விளக்கு, இரவிக்கைத்துணி, மற்றும் மங்கலப்பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் இந்துசமயமன்றத்தின் மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் வியாசர்பாடி கிளை ஸ்ரீஹரிஹரன்ஜி, ஸ்ரீகாஞ்சிகைங்கர்யசபா ஸ்ரீ.ராமச்சந்திரன் ஜி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் சமயமன்ற சட்டப்பிரிவு உறுப்பினருமான ஸ்ரீ.அனந்தசுப்ரமணியன்ஜி, சமயமன்ற புரவலர் ஸ்ரீ.ஸ்ரீதர ரத்னம்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.விழா நிறைவில் ப்ரசாதம் சர்க்கரைப்பொங்கல் மற்றும் புளியோதரை அனைவருக்கும் வழங்கப்பட்டது.இந்த விழா சிறப்பாக நடந்தேற எங்களுக்கு பெரிதும் உதவியும், பூஜைக்கு பள்ளிக்கரணையிலி ருந்து மஹாபெரியவர் விக்ரகத்தை அழகாக அலங்கரிக்கப்பட்ட வண்டியை தந்துதவி தானே கூட வந்து அனைத்து கைங்கர்யங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு இந்துசமயமன்றம் சார்பில் மனமார்ந்த நன்றிகள். தண்டலம் வேதபாடசாலை நிர்வாகிகள் மற்றும் வழக்கம்போல் உதவிய ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபாவிற்கு சமயமன்றம் சார்பில் நன்றிகள். இந்த கைங்கர்யத்திற்கு ஊக்கசக்தியாக இருந்த ஸ்ரீ.ஸ்ரீதர் அண்ணாவிற்கு நமஸ்காரங்கள். எங்களுடன் இணைந்து சேவையாற்றிய தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஸ்ரீராமிற்கு நன்றிகள்.
குருசேவையில்,
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் மற்றும்
கௌரி வெங்கட்ராமன்.

இருள் நீக்கி தந்த நல்மணியே

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் இரண்டாம் ஆண்டு ஆராதனை.

“இருள் நீக்கி தந்த நல்மணியே – மன
மருள் நீக்க வந்த மாமணியே
தவக்கனலாக மிளிரும் தூமணியே
சிவக்கனலாக ஒளிரும் அருள்மணியே
சகம் போற்றி புகழும் குருமணியே -நல்
அகம் வாழ்த்தி பணியும் ஜயமணியே
பதம் போற்றி நின்றோம் தவமுனியே
பவம் போக்கி அருள்வாய் சிவமணியே’

ஸ்ரீபுதுப்பெரியவரின் பொற்பதங்களில் நமஸ்காரங்களுடன்,
-புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன்