நமஸ்காரங்கள்!
கடந்த மாதத்தில் கிடைத்த பிடி அரிசி மற்றும் பருப்பு வகைகள் பாடசாலை தவிர புயலால், பெருமழையால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டது. ஸ்ரீ.சதீஷ்ஜீ மூலம் சேவாபாரதி கேம்ப்பில் சேர்க்கப்பட்டது. உணவிற்கு தவித்த மக்களுக்கு உதவிய தங்களனைவருக்கும் மிக்க நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
க.ஆத்ரேய சுந்தரராமன்

சங்காபிஷேக விழா!

கும்பகோணம் அருகில் சிவனாரகரம் கிராமத்தில் அருள்மிகு ஜலமுகளாம்பிகை உடனுறை ஸ்ரீவாருணீச்வரஸ்வாமிக்கு ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் கார்த்திகை சோமவார 108 சங்காபிஷேகம் இந்துசமயமன்றம் சார்பில் 02.12.24 அன்று வேதோக்தமாக, வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவிற்கு கும்பகோணம் ப்ரம்மஸ்ரீ.தினகர சர்மா அவர்கள் வருகைபுரிந்தது நாங்கள் செய்த பெரும்பாக்கியமாகக்கருதுகிறோம். சாக்ஷாத் அம்பாளே, பரதேவதையான ஸ்ரீகாமாக்ஷியே அந்த மஹனீயரை வரவழைத்தாக கருதி அவர் திருப்பாதங்களை நமஸ்கரிக்கிறோம். வழக்கம்போல அவருடைய சிஷ்யர் ஸ்ரீ.ப்ரபு சர்மா குழுவினர் பூஜைகள், ஹோமங்களை நடத்திவைத்தும், நந்திவரம் சிவஸ்ரீ.நடராஜ சிவாச்சார்யார் அவர்கள் அபிஷேக பூஜைகளை நடத்திவைத்தும் விழாவை நடத்தித்தந்தனர். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றம் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் சமயமன்ற அன்பர்கள், கிராமத்து பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதற்கான டெல்லி ப்ரம்மஸ்ரீ.வெங்கட்ராமய்யர் அவர்களின் பணி மகத்தானது.

தீபத்திருவிழா

நேற்று 24.11.24 ஞாயிறன்று திருவண்ணாமலையில் நமது தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு சார்பில் மிகபிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பெற்ற தீபத்திருவிழா திருக்குடைகள் சமர்ப்பிக்கும் பவனி நிகழ்ச்சியில் இந்துசமயமன்ற மாநில அமைப்பாளரும், தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தேசீய செயற்குழு உறுப்பினருமான புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் கலந்துகொண்டார்.

பந்தள அரண்மனை மன்னர் ராஜா ஸ்ரீராஜவர்மா

இன்று (08.11.24) வெள்ளிக்கிழமை கலியுக கண்கண்ட தெய்வம் ஸ்ரீஐயப்பன் அவதரித்த பந்தள அரண்மனை மன்னர் ராஜா ஸ்ரீராஜவர்மா அவர்களை சந்தித்து உரையாட வாய்ப்பை நமக்கு ஸ்ரீவிஷ்ணுசித்தர் ரங்கஸ்வாமி ஐயா நல்கினார். நமது இந்துசமயமன்ற நிகழ்ச்சிகளையும் நமது ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ மேளா பற்றியும் ஆர்வத்துடன் கேட்டறிந்த பந்தள மன்னர் அவர்கள் அவசியம் குருவாயூரில் வரும் 2025 மார்ச் மாதத்தில் நாம் நடத்தவுள்ள ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞத்தில் கலந்துகொள்வதாக கூறியுள்ளார்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
இந்துசமயமன்றம்.

இந்துசமயமன்றம் சார்பில் வழக்கம்போல தீபாவளி பண்டிகை புது வஸ்த்ரம், பக்ஷணங்கள் பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டது. நல்ல உள்ளங்களின் பேராதரவுடன் நமது தொடர்பிலுள்ள மாதாமாதம் சுத்தமான நல்லெண்ணெய் வழங்கும் திருக்கோவில்கள், வேதபாடசாலைகள், பழங்குடியினர் பகுதிகள் என இந்த முறை நாம் கடந்த தடவையைவிட அதிக இடங்களில் கைங்கர்யம் செய்ய வாய்ப்பை ஸ்ரீகாஞ்சிப்பெரியவர்கள ஏற்படுத்திக்கொடுத்தார்கள். அவரது அளப்பரிய கருணையை மனதில் இருத்தி மேலும் பணி செய்வோம். உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் கருணாகடாக்ஷம் என்றென்றும் நிலைத்திருக்க ஸ்ரீசரணர்களை ப்ரார்த்திக்கிறோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன்
முனைவர்.கலைராம.வெங்கடேசன்
இந்துசமயமன்றம்